வேலூர் அருகே தோல்வி அடைந்த வேட்பாளர் ஒன்றை ஆண்டுகளாக வார்டு உறுப்பினராக பதவி வகித்து வந்ததாக புகார் எழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம், ராஜக்கல் ஊராட்சியில் நடந்த வார்டு உறுப்பினர் தேர்தலில் ஜெயந்தி வெங்கடேசன் என்பவர் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகளால் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த தேர்தலுக்கு பின்னர், அவர் பதவியேற்று ஏழாவது வார்டு உறுப்பினராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், ஜெயந்தி வெங்கடேசன் 64 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்ததாகவும், ஜெயந்தி பிரபாகரன் 119 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாகவும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி பிரபாகரன், உடனடியாக பேரணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதாவிடம் புகார் மனுவை அளித்துள்ளார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கையில், நடந்து முடிந்த அந்த தேர்தலில் ஜெயந்தி வெங்கடேசன் தான் வெற்றி பெற்றார். ஆனால் தேர்தல் ஆணைய இணையதளத்தில் தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது சரி செய்யப்படும் என்று விளக்கம் அளித்துள்ளனர்.
நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்த ஜெயந்தி பிரபாகரன், தேர்தல் ஆணைய இணையதளத்தில் தான் வெற்றி பெற்றதாக தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டதை பார்த்து மகிழ்ச்சி அடைந்த நிலையில், அந்த மகிழ்ச்சி ஒரு சில நாட்களில் சோகமாக மாறியுள்ளது.
அதே சமயத்தில் வெற்றி பெற்ற ஜெயந்தி வெங்கடேசனுக்கு பெரும் பதற்றத்தை உண்டாக்கியதாக ராஜக்கல் ஊராட்சி மக்கள் தெரிவிக்கின்றனர்.