`விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் நெறியாளர், ம.தி.மு.க தலைவர் வைகோ பெயரைக் குறிப்பிட்டு கேட்டபோது, அதை கடந்து போனது வருத்தமளிக்கிறது’ என, ம.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் தி.மு.ராசேந்திரன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், “தனியார் தொலைக்காட்சிக்கு திருமாவளவன் அளித்த நேர்காணல் இரண்டு நாள்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. வைகோ நெஞ்சில் நிறைந்த தம்பியாக எந்நாளும் திகழும் திருமா, இந்த நேர்காணலில் ஈழப்பிரச்னைக் குறித்து தெரிவித்திருக்கும் கருத்துகள் மிகுந்த மன வேதனையையும், கொந்தளிப்பையும் எங்கள் இயக்கத் தோழர்களுக்கு மட்டுமின்றி தமிழ் உணர்வாளர்களுக்கும் ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்திய நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி 1981-ம் ஆண்டிலிருந்து வீரமுழக்கமிட்டவர் வைகோ. ஈழத்தமிழர் பிரச்னைக்குத் தமிழீழம் ஒன்றே தீர்வு என்று நாற்பது ஆண்டுகளாகக் கூறி வருபவர். வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழர்கள் அந்த மண்ணின் பூர்வ குடிமக்கள் என இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் சொல்ல வைத்த தலைவர். இந்திய அமைதிப்படை ஈழத்தமிழர்களை வேட்டையாடியபோது, நாடாளுமன்றத்தில் எரிமலையாக வெடித்தவர் வைகோ.
இவையெல்லாம் திருமா அறிந்ததுதான். தமிழ்நாட்டு இளைஞர்களின் இதயச் சுவர்களில் தமிழீழ விடுதலைப்போராட்டமும், புலிகள் தலைவர் பிரபாகரனும் கல்வெட்டாய் பதிந்து இருப்பதற்கு வைகோதான் காரணம் என்பதை பல மேடைகளில் திருமாவளவனே சுட்டிக்காட்டியிருக்கிறார். பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு 577 நாள்கள் வேலூர் வெங்கொடுமை சிறையில் வாடியவர் வைகோ. பொத்தம் பொதுவாக தமிழ்நாட்டு தலைவர்கள் ஈழத்தமிழர் பிரச்னையில் அரசியல் செய்தார்கள் என்று திருமா குறிப்பிடுவது வேதனை தருகிறது.

உலக நாடுகள் பலவும் சிங்கள இனவாத அரசுக்கு உதவி செய்தன. ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்கும் போரில் பங்கேற்றன. இந்தியாவும் போரில் பங்கேற்று ஈழத்தமிழர்கள் படுகொலைக்குத் துணை போனது. வைகோ, அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கை எட்டு முறை சந்தித்து, சிங்கள அரசுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் போட வேண்டாம், ஆயுத உதவிகள் அளிக்க வேண்டாம் எனக் கோரினார். ஆனால் இந்தியா போரை நிறுத்த முயலவில்லை. போர் முடிந்ததும், எங்களுக்காக இந்தப் போரை இந்தியாதான் நடத்தியது என்றான் ராஜபக்சே. அந்தக் காலகட்டத்தில் அப்போது ஆட்சியில் இருந்த மத்திய அரசின் நடவடிக்கைகளை கடுமையாக கண்டனம் செய்தவர் வைகோ.
இதனை இப்போது நேர்காணலில் குறிப்பிட்டு, வைகோமீது புழுதி வாரித் தூற்றுவது எந்த நோக்கத்தில்… புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தமிழ்நாட்டுத் தலைவர்களை விமர்சனம் செய்தார் என்று திருமாவளவன் குறிப்பிடுகின்ற காலகட்டத்தில் வைகோ, பழ.நெடுமாறன், டாக்டர் ராமதாஸ், தா.பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள்தான் ஈழப்போரில் இந்தியாவின் நிலைப்பாடு தவறான அணுகுமுறை என்று கண்டனம் தெரிவித்தனர். தனியார் தொலைக்காட்சி நெறியாளர், வைகோ பெயரைக் குறிப்பிட்டு கேட்டபோதும் திருமா அதை கடந்து போனது வருத்தமளிக்கிறது.

2002-ல் சமாதானக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து புலிகள் அழைப்பை ஏற்று திருமா உட்பட சிலர் ஈழம் சென்றபோது, வைகோ வேலூர் சிறையில் இருந்தார், வைகோ இலங்கையில் நுழைய சிங்கள அரசு தடைபோட்டிருந்தது. அந்தத் தடை இன்றும் நீடிக்கிறது என்பது நேர்காணல் செய்த நெறியாளருக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. அப்போது, எம்.ஜி.ஆர் பற்றி உயர்வாகக் கூறினார் பிரபாகரன் என்று கூறிய திருமா, மற்ற தமிழ்நாட்டு தலைவர்கள்மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகக் கூறினாராம். யார் யார் என்று நெறியாளர் கேட்க தனியாகச் சொல்கிறேன் என்று திருமா கூறுகிறார். வைகோ, பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, கோவை இராமகிருஷ்ணன் போன்ற தலைவர்கள்மீது நம்பிக்கை இழந்ததாக பிரபாகரன் கூறியதைப் போன்று நிறுவுகிறார் திருமா. இது நியாயம்தானா…
போரை நிறுத்தக் கோரி தாம் செங்கற்பட்டில் உண்ணாவிரதம் இருந்தபோது, டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வந்து பார்த்தனர், என்னை யாரும் ஊக்கப்படுத்தவில்லை என்று திருமா கூறியதும், நெறியாளர் `வைகோ வெளிநாட்டில் இருந்தாரா..?’ என்று நக்கலாகக் கேட்கிறார். அதையும் இவர் ஆமோதிக்கிறார். 1989-ம் ஆண்டு வைகோ தனது உயிரை துச்சமாகக் கருதி, யுத்தக் காலத்தில் வவுனியா காட்டுக்குச் சென்று மேதகு பிரபாகரனைச் சந்தித்தார். குண்டு மழை பொழிந்து கொண்டிருந்த நேரத்தில் பிரபாகரனுடன் 21 நாள்கள் தங்கி இருந்துவிட்டு, வைகோ கடலில் புலிகள் பாதுகாப்புடன் தமிழ்நாடு திரும்பியபோது, பிரபாகரன் தனது கைப்பட முதல்வர் கலைஞருக்கு கடிதம் எழுதிக் கொடுத்து அனுப்பியிருந்தார்.

அதில், `வைகோ தனது உயிரையும் பொருட்படுத்தாது எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் அடர்ந்த கானகத்தின் நடுவே என்னையும், சக தோழர்களையும் சந்தித்திப் பேச வைத்திருக்கும் துணிச்சலையும் தமிழ்ப்பற்றையும் பார்க்கும்போது நான் எனது மொழிக்காகவும் தமிழ் நாட்டுக்காகவும் இன்னும் ஆயிரம் தடவை இறக்கலாம் என்னும் மனத்தென்பே ஏற்படுகிறது’ என்று பிரபாகரன் குறிப்பிட்டிருந்தார். இதைவிட வேறு எவரிடமிருந்தும் வைகோவின் தமிழ் இனப் பற்றுக்குச் சான்றிதழ் தேவை இல்லை. முள்ளிவாய்க்கால் இறுதிப் போரைப்பற்றி பேசத் தொடங்கினால் தமிழ்நாட்டு அரசியல் களத்தின் நோக்கம் தடம் புரண்டுவிடும். இந்துத்துவ சனாதன சக்திகளை ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டியதுதான் தற்போதைய முதன்மையான சிந்தனை, அதில் குறிக்கோளாக இருக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருக்கிறது.