சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது கற்கள், பாட்டில் வீசி ரவுடிசத்தில் ஈடுபட்ட சாதி அமைப்பு உள்ளிட்ட இருதரப்பு மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அருந்ததியினர் மக்களை தெலுங்கர்கள் என்று சீமான் பேசியதாகக் கூறி, இன்று ராமநாதபுரம், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் ஆதித்தமிழர் பேரவை அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது ஆதித்தமிழர் பேரவை அமைப்பினர் கற்கள், பாட்டில் வீசி ரவுடிசத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அருந்ததியர்களை சீமான் தவறாக பேசியதாக, அக்கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்ய முயன்ற ஆதித்தமிழர் பேரவை அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில், சுமார் 10 பேர் தப்பித்து, அடங்க மறுப்போம் என்று முழக்கமிட்டவாறே, நாம் தமிழர் கட்சி அலுவலகத்தின் மீது பாட்டிலையும், கற்களையும் வீசி ரவுடிசத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கட்சி அலுவலகத்தில் இருந்த நாம் தமிழர் கட்சியினர், கல் வீசிய நபர்களை தடுத்து நிறுத்தி பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், நாம் தமிழர் மற்றும் ஆதித் தமிழர் பேரவையினர் இடையே மோதல் ஏற்பட்ட விவகாரத்தில், இரு தரப்பினர் மீதும் போரூர் போலிசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 15 பேர் மீதும், ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்த 20 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.