டாக்கா, நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் முகாமில்ஏற்பட்ட தீ விபத்தில், 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் கருகியதால், ஆயிரக்கணக்கானோர் வீடின்றி திறந்தவெளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மியான்மரில் இருந்து, 2017ல் வங்கதேசத்துக்கு அகதிகளாக வந்த ரோஹிங்கியா சமூகத்தினர், இங்குள்ள காக்ஸ் பஜார் பகுதியில் மிகப்பெரிய முகாம் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.
இங்கு, ஓலை மற்றும் மூங்கில்களால் அமைக்கப்பட்ட குடிசைகளில் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், இங்கிருந்த குடிசை ஒன்றில் நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டது.
அடுத்த சில நிமிடங்களில் மளமளவென பற்றி எரிந்த தீ, மற்ற குடிசைகளுக்கும் பரவியது. இதில், இங்கிருந்த 2,000க்கும் அதிகமான வீடுகள் தீயில் எரிந்தன. இதில், 35 மசூதிகளும், 21 கல்வி நிலையங்களும் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, இங்கிருந்த அகதிகள் வீடுகளைவிட்டு வெளியேறி குழந்தைகளுடன் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். இதனால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டாலும், பெருமளவிலான பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
வீடுகளை இழந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், பொது இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement