தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள கரிசல்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீபைத்தம்மாள் ஸ்ரீ பொம்மையைசாமி கோயிலில், மாசி திருவிழா நடைபெற்றது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு கரிசல்பட்டி கிராம பூசாரி திருமலை வடிவேல் பாண்டியன், கதிர்நரசிங்கபுரத்தைச் சேர்ந்த செல்லச்சாமி, மலையாண்டிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன், தர்மலிங்கபுரத்தைச் சேர்ந்த கணேஷ், ஜக்கையன், ராமர் உள்ளிட்டோர் சேர்ந்து `தம்பிரான் ஓட்டம்’ விழாவை நடத்தினர்.

ஆண்டிபட்டியில் 16 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்ட இந்தத் திருவிழாவில், கிராமத்தில் நாட்டாமை வீட்டில் வைக்கப்பட்டிருந்த பூஜை கூடைகள் உறுமி மேளம் முழங்க தேவராட்டத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோயிலில் பூஜை நடத்தப்பட்டது. பின்னர் ஊர் பட்டதாரர்கள், பெரியதனம் ஆகியோர் முன்னிலையில் கொழுக்கட்டை தம்பிரான் ஓட்டம் நடைபெற்றது.
பல்வேறு கிராமங்களிலிருந்த கலந்துகொண்ட காளைகளை, கோயில் வாசலிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திலிருந்து ஓடவிட்டார்கள். கோயில் வாசலில் வெள்ளை துண்டு விரித்து, எலுமிச்சை பழம் வைக்கப்பட்டிருந்தது. இதில் முதலில் வெள்ளை வேட்டியைக் கடந்த காளைக்குச் சிறப்பு பூஜைகள் செய்து தேவராட்டத்துடன் வரவேற்புக் கொடுத்தனர்.

காளைகள் சீறிப்பாய்ந்து ஓடிவந்தபோது அவற்றின் உரிமையாளர்கள், கிராம மக்கள் மூங்கில் குச்சியுடன் காளைகளுக்கு உற்சாகமளித்து ஓடிவந்தனர். இந்த தம்பிரான் ஓட்டம் இன்று மூன்று முறை நடைபெற்றது. இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்த தம்பிரான் ஓட்ட விழாவை, ஆண்டிபட்டியைச் சுற்றியிருக்கும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் பார்வையிட்டனர்.