ஆதாரமின்றி ஊழல் புகார் கூறும் நாராயணசாமி மீது வழக்கு தொடரப்படும்: புதுச்சேரி பாஜக

புதுச்சேரி: ஆதாரமில்லாமல் ஊழல் புகார் கூறும் நாராயணசாமி மீது சட்டபூர்வமான வழக்கை பாஜக தொடரும் என்று பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் வெளியிட்ட அறிக்கையில், “நாராயணசாமி என்னுடைய 5 கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு விவாதத்திற்கு வரலாம். புதுச்சேரி மாநிலத்தில் தனிகணக்கு ஆரம்பித்தது யார்?, தனி கணக்கு ஆரம்பித்ததன் மூலம் 70% கொடையை 30% மாற்றி அமைத்தது எந்த அரசு? அதற்கு துணை நின்றது யார்? கடந்த 50 ஆண்டுகளில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்தபோது ஏன் புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வாங்கவில்லை?

உலகிலேயே அதிகமான ஊழலில் சிக்கிய தலைவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்கள்? எந்த கட்சியை சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் ஊழலுக்காக சிறை சென்றார்? 20 லட்சம் கொடுத்தால் பாருக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று கூறும் நாாயணசாமி அந்த நபரின் பெயரை வெளிப் படையாக கூற முடியுமா? கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது புதுச்சேரி மாநிலத்திற்கு தனி கணக்கை ஆரம்பித்து அதன் மூலம் ரூ.10 ஆயிரம் கோடி கடன் சுமை உள்ளது என்றுதான் நான் தெரிவித்திருந்தேன்.

மாறாக, புதுச்சேரிக்கு மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி மானியம் வழங்கியுள்ளது என்று நான் கூறியுள்ளதாக சொல்லும் நாராயணசாமி செய்திகளை சரியாக படிப்பதில்லையா அல்லது கனவு உலகத்தில் உள்ளாரா என்று கேள்வி எழுகிறது. மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு பல மாநில அரசுகளை கலைத்து 132 முறை ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியுள்ளது, கடந்த 8 ஆண்டுகளில் பாரதிய ஜனதா எந்த மாநிலத்தின் அரசையும் கலைக்கவில்லை. கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசு தொடர்ந்து ஜனநாயக படுகொலையை செய்து பல மாநில அரசுகளை கலைத்துள்ளது.

ராகுல் காந்தியையும் காங்கிரஸ் கட்சியையும் நம்பி இனி எந்த கட்சியும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டார்கள். உதாரணம் மம்தா, ஆம் ஆத்மி கட்சிகளின் அறிவிப்புகளே இதற்கு உதாரணம். காங்கிரஸ் கட்சி இனி ஒருபோதும் புதுவையிலும், மத்தியிலும் ஆட்சி அமைக்காது என்பதை மறந்து நாராயணசாமி எதையாவது பேசிக் கொண்டிருக்கிறார். ஆதாரமில்லாமல் ஊழல் புகார் கூறும் நாராயணசாமி மீது சட்டபூர்வமான வழக்கை பாஜக தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.