திருவனந்தபுரம், கேரளாவின் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திருவிழாவின் இறுதி நாளான நேற்று, ஆயிரக்கணக்கான பெண்கள், சாலைகளில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது.
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இந்த கோவிலில் பூஜை செய்ய பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடக்கிறது.
இறுதி நாள் அன்று, பகவதி அம்மன் கோவிலின் வாயிலில் துவங்கி சாலையின் இருபுறமும் கற்களால் தற்காலிக அடுப்பு செய்து, அதில் பெண்கள் வரிசையாக பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.
கேரளாவின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, தமிழகத்தில் இருந்தும் பெண்கள் சென்று, பொங்கல் வைப்பர்.
கடந்த 2009ல், 25 லட்சம் பெண்கள் திரண்டு பொங்கல் வைத்தனர். இது, ‘கின்னஸ்’ உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது.
இந்நிலையில், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலின் பொங்கல் வைக்கும் வைபவம் நேற்று நடந்தது. காலை 10:40 மணிக்கு கோவிலின் தலைமை பூசாரி பொங்கல் அடுப்பை பற்றவைத்தார்.
இதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பெண்கள் மட்டுமின்றி, திருநங்கையரும் ஆர்வமுடன் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதற்காக திருவனந்தபுரம் நகரம் முழுதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. போலீசார், தீயணைப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நகரம் முழுதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொங்கல் வைக்கும் வைபவம் நடக்கவில்லை.
பக்தர்கள் தங்கள் வீடுகளிலேயே பொங்கல் வைத்து வழிபட்டனர். இந்த ஆண்டு தடை இல்லாத காரணத்தால், ஆயிரக்கணக்கான பெண்கள் ஆர்வமுடன் திரண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்