புதுடெல்லி: இந்தியாவை காட்டிக் கொடுக் காதீர்கள் என ராகுல் காந்தி மீது மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் விமர்சனம் செய்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் இங்கிலாந்து சென்றிருந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்தநிகழ்ச்சியில் ராகுல் உரையாற்றினார். அப்போது இந்தியாவைப் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தலைநகர் லண்டனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ராகுல்பேசும் போது, “இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடைபெறுகிறது. ஆனால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலகின் ஜனநாயக நாடுகள் இதைக் கண்டுகொள்ளத் தவறிவிட்டன” என கூறியுள்ளார்.
இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் நேற்று கூறியதாவது: காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே உள்ளூர் பிரச்சினைகள் குறித்து ஐ.நா. சபையில் புகார் செய்துள்ளது. இப்போது இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுமாறு பிற நாடுகளுக்கு கோரிக்கைவைக்கிறது. அடிமை மனப்பான்மையிலிருந்து அக்கட்சி இன்னும் விடுபடவில்லை.
ராகுல் காந்தி தனது கட்சியின் தோல்விகளை மறைப்பதற்காக, வெளிநாட்டு மண்ணில் இந்தி யாவின் புகழை கெடுக்க முயற்சிக்கிறார். இதற்காக வெளிநாட்டு அமைப்புகள், வெளிநாட்டு தொலைக்காட்சி சேனல்கள் எனகிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்கிறார். இந்தியாவை காட்டிக் கொடுக்காதீர்கள் ராகுல். உங்கள் பொய்களை யாரும் நம்ப மாட்டார்கள்.
அவருடைய மொழி, எண்ணங்கள், செயல்பாடு ஆகிய அனைத்துமே சந்தேகத்துக்குரியவை. இது முதல் முறையல்ல. கரோனா வைரஸ் தொற்று பரவியபோது, அதைத் தடுக்க தயாரிக்கப்பட்ட இந்திய தடுப்பூசி குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
எல்லையில் அத்துமீற முயன்ற சீன ராணுவத்தை நமது ராணுவம் முறியடித்தது. இந்த விவகாரத்திலும் சந்தேகத்தை எழுப்பினார். ஆனால் அவர் சீன அதிகாரிகளை ரகசியமாக சந்தித்துப் பேசுகிறார்.
காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருக்கலாம். ஆனால் இந்தியா பலவீனமாக இல்லை. இந்திய ஜனநாயகம், மக்கள், ராணுவம் ஆகிய அனைத்துமே வலிமையாக உள்ளது. இந்தியாவின் தலைவரான மோடியும் வலிமையாக உள்ளார். உலக தலைவர்கள் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.
ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள ராகுல் காந்தி, அரசியல் சாசன அமைப்புகள் மீது நம்பிக்கையை இழந்துள்ளார். எனவேதான் அவரது செயல்பாடுகள் அப்படி உள்ளன.
இவ்வாறு மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்தார்.