‘இந்த வயதிலேயே குடும்ப பாரம் சுமக்கும் சிங்க பெண்’ இளநீர் விற்கும் கல்லூரி மாணவி: நாளை உலக மகளிர் தினம்

வல்லம்: உலகம் முழுவதும் நாளை சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட உள்ளது. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற கூற்று மலையேறி, இப்போது கல்வியில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்கி வருகின்றனர். ஆணுக்கு நிகராக வல்லமை காட்டி சமுதாயத்தை தங்களை நோக்கி அண்ணாந்து பார்க்க வைத்துள்ளனர் மகளிர். அந்த வகையில் தன் குடும்பத்திற்காக கல்வி ஒரு பக்கம், பகுதி நேர பணி ஒரு பக்கம், தாய்க்கு உறுதுணையாக விடுமுறை நாளில் இளநீர் விற்பனை மறு பக்கம் என்று பம்பரமாய் சுற்று சுழலும் தஞ்சையின் சிங்கப் பெண் பற்றி பார்ப்போம்.

பெரிய கோயில் அருகே உள்ள ராஜராஜன் சிலையை விடுமுறை நாட்களில் கடந்து செல்பவர்களுக்கு இந்த பெண் நன்கு பரிட்சயம். இளநீரை எடுக்கும் கரங்கள் வெகு வேகமாக அரிவாளால் அதை சீவி வாடிக்கையாளர்கள் கரங்களில் சில நொடிகளில் கொண்டு சேர்க்கும் அந்த கல்லூரி மாணவி காயத்ரி(20). தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கலை கல்லூரியில் பி‌.காம் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு அக்கா ஒருவரும், தம்பி ஒருவரும் உள்ளனர். அப்பா முருகானந்தம். சமீபத்தில் காலமாகி விட்டார். அம்மா சரிதா. பல ஆண்டுகளுக்கும் மேலாக தஞ்சை பெரிய கோயில் மற்றும் மேல வீதி பகுதியில் தள்ளுவண்டியில் இளநீர் விற்று அன்றாட பிழைப்பை நடத்தி குடும்பத்தை சுமந்து வருகிறார்.

மிகுந்த சிரமப்படும் தாய்க்கு பக்கத்துணையாக இருக்க வேண்டும் என்பதற்காக காலையில் கல்லூரி, மாலையில் பகுதிநேர பணி, விடுமுறை நாளில் தாய்க்கு துணையாக இளநீர் கடை என்று காயத்ரி பிசியாக இருக்கிறார். க்ளாசிக்கல் டான்ஸில் அதிகம் ஆர்வம் கொண்ட இவர் பரத நாட்டிய பயிற்சியும் எடுத்து வருகிறார். வாரத்தில் 5 நாட்கள் கல்வி கற்கவும், பகுதிநேர பணிக்கும் ஓடிக்கொண்டே இருப்பவர் சனி, ஞாயிறு அன்றும் தங்களின் இளநீர் வியாரத்தில் ஈடுபடுகிறார். இதுகுறித்து மாணவி காயத்ரி கூறுகையில், நான் 8ம் வகுப்பு படிக்கும்போதே அம்மாவுக்கு துணையாக விடுமுறை நாளில் இளநீர் வெட்ட பழகிக் கொண்டேன். தற்போது கல்லூரி படித்து கொண்டிருந்தாலும், இளநீர் கடையில் நின்று வியாபாரம் செய்கிறேன்.

என் குடும்பத்திற்காக உழைப்பதில் எனக்கு மிகுந்த பெருமை தான். என்னை படிக்க வைக்க என் அம்மா சிரமப்படுவதை பார்க்கிறேன். அவருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. கிளாசிக்கல் நடனத்தையும் நன்றாக கற்று முன்னேற வேண்டும் என்பது எனது கனவு. நான் வியாபாரம் செய்யும்போது ஒரு நாளைக்கு ரூ.1000, ரூ.1500 வரை இளநீர் விற்பனை செய்வேன். என் அம்மா கடைக்கு வந்து வியாபாரம் பார் என்று எப்போதும் கூறியதில்லை. சொந்த காலில் நின்று உயர்வடைய வேண்டும் என்பதுதான் எனது மிகப்பெரிய குறிக்கோள் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.