பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ‘பிராஜக்ட் கே’ (Project K) என்ற படத்தில் நடித்து வருகிறார். நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பின்போது அமிதாப் பச்சனுக்குக் காயம் ஏற்பட்டது. அவருக்கு வலது பக்க விலா எலும்பு முறிவும், தசைநார் கிழிவும் ஏற்பட்டிருப்பதாக அவரே தனது சோஷியல் மீடியா பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அமிதாப் பச்சனுக்குக் காயம் ஏற்பட்ட உடனே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஹைதராபாத் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்களின் அறிவுரையின் படி தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
தனக்கு ஏற்பட்ட காயம் குறித்து சோஷியல் மீடியாவில் அமிதாப் பச்சன் பகிர்ந்திருந்த நிலையில் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவரின் உடல்நலம் தொடர்பாக விசாரித்து வந்தனர். இந்நிலையில், தற்போது அமிதாப் பச்சன் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து ட்விட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
T 4576 – your prayers are the cure
— Amitabh Bachchan (@SrBachchan) March 7, 2023
அவர் வெளியிட்டுள்ள அப்பதிவில், “உங்களின் அக்கறைக்கும், அன்பிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது பிரார்த்தனை என்னைக் குணப்படுத்தும். என் மீது நீங்கள் செலுத்தும் அக்கறையைக் கண்டு வியப்படைகிறேன். இந்த அரவணைப்பிற்காக உங்களுக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். அனைவருக்கும் எனது ஹோலி வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.