பெங்களூரு: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான பாராசூட் சோதனைகளை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தியது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. விண்வெளியில் 400 கிமீ சுற்றுப்பாதையில் 3 ஆய்வாளர்கள் கொண்ட குழு 3 நாட்கள் ஆய்வில் ஈடுபடுவர். பின்னர் அவர்கள் இந்திய கடல் பகுதியில் பாராசூட் மூலமாக பத்திரமாக திரும்பி வருவர்.
நாட்டின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் அடுத்த ஆண்டு இறுதியில் செயல்படுத்தப்படும் என நாடாளுமன்றத்தில் ஒன்றிய அறிவியல் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பைலட் மற்றும் ஏசிஎஸ் எனும் இரு விதமான பாராசூட்களை இஸ்ரோ வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. கடந்த 1 மற்றும் 3ம் தேதி சண்டிகரில் உள்ள ஆய்வகத்தில் இரு விதமான பாராசூட்களும் பைரோடெக்னிக் மார்டர் கருவி பயன்படுத்தி சோதிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.