காட்டேரி பூங்காவில் மலர் செடிகள் நடவு பணி துவக்கம்-1 லட்சத்து 70 ஆயிரம் நாற்றுக்ள் நடவு செய்ய திட்டம்

குன்னூர் : காட்டேரி பூங்காவில் முதல் சீசனுக்கான மலர் செடிகள் நடவு பணிகள் துவங்கியது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எனினும், கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பல லட்சம் சுற்றுலாபயணிகள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து செல்கின்றனர்.

இதனால், இவ்விரு மாதங்கள் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கப்பதற்காக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.குறிப்பாக, தோட்டக்கலைத்துறை சார்பில் அதன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காக்களையும் மேம்படுத்தி, பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். பின், மலர் கண்காட்சி,ரோஜா காட்சி, காய்கறிகாட்சி, பழக்காட்சி ஆகியவைகள் நடத்தப்படுகிறது.

மேலும், தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காட்டேரி பூங்கா உட்பட அனைத்து பூங்காக்களும் மேம்படுத்தப்படும். இந்நிலையில், கோடை சீசன் நெருங்கிய நிலையில், தற்போது அனைத்து பூங்காக்களிலும் மலர் நாற்றுகள் நடவு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அனைத்து பூங்காவிலும் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. கோடை சீசனை முன்னிட்டு குன்னூர் அருகேயுள்ள காட்டேரி பூங்காவிலும் மலர் நாற்று நடவு பணிகள் நேற்று துவங்கியது. இப்பணிகளை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காட்டேரி பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு நடவு பணிகள் துவக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக பிளாக்ஸ்,சூரியகாந்தி,ஆன்டிரினம்,பெடுனியா,பால்சம்,பெகோனியா,சால்வியா,குட்டை ரக சால்வியா,ஆஸ்டர்,அலீசம்,ஜினியா,பிரேஞ்ச் மேரிகோல்டு மற்றும் ஆப்பிரிக்க மேரிகோல்டு உட்பட 30 வகையான மலர் நாற்று நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மனி, நெதர்லாந்து,பிரான்ஸ்,கொல்கொத்தா,காஷ்மீர் போன்ற பகுதிகளில் இருந்து பல்வேறு வகையான நாற்றுகள் பெறப்பட்டு, சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் நாற்றுகள் நடவு செய்யப்படடுள்ளது. இந்த மலர்கள் அனைத்தும் ஏப்ரல் மாதம் மூன்றாவது வாரத்தில் பூத்துவிடும். 2021-22ம் ஆண்டு காட்டேரி பூங்காவிற்கு 49 ஆயிரத்து 823 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இந்த ஆண்டு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, என்றார்.

இந்த நாற்று நடவு நிகழ்ச்சியில், தோட்டக்கலை அலுவலர் ஹரிபாஸ்கர், உதவி தோட்டக்கலை அலுவலர் நேசமணி மற்றும் பண்ணை பணியாளர்கள் பலர் கலந்துக் கொண்டனர். தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங்காக்களிலும் கோடை சீசனுக்காக நாற்று நடவு பணிகள் துவங்கி நடந்து வரும் நிலையில், பூங்காக்களில் மலர்கள் இன்றி காணப்படுகிறது. இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். அடுத்த மாதம் முதல் அனைத்து பூங்காக்களிலும் மலர்கள் பூத்துவிடும். எனவே, அடுத்த மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் வரும் சுற்றுலா பயணிகள் அனைத்து பூங்காவிலும் மலர்களை கண்டு ரசிக்க முடியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.