பெங்களூரு: ‘கர்நாடகாவில், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல், சின்னம்மை அதிகரித்துள்ளதற்கு பெங்களூரின் சீதோஷ்ண நிலையே காரணம்’ என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கோடை காலத்தில், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல், சின்னம்மை தாக்குதல் பரவி வருகிறது. ‘இத்தகைய அறிகுறிகள், மற்ற குழந்தைகளையும் தாக்கும்.
பாதிக்கப்பட்ட குழந்தைகள் குணமாகும் வரை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்’ என பெற்றோருக்கு, பல தனியார் பள்ளி நிர்வாகங்கள் தகவல் அனுப்பியுள்ளன.
இந்திய குழந்தை மருத்துவ அகாடமி தலைவர் டாக்டர் பிரசாத் கூறியதாவது:
பல காரணங்களால் குழந்தைகள் இடையே சின்னம்மை பரவி வருகிறது. பெங்களூரின் சீதோஷ்ண நிலையே முக்கிய காரணம்.
குளிர் காலம் முடிந்து, கோடை துவங்குவதால், சின்னம்மை மிக வேகமாக பரவி வருகிறது.
குழந்தைகள் தும்மும் போது தெறிக்கும் எச்சிலை முகர்ந்தாலும் கூட, மற்ற குழந்தைகளுக்கும் விரைவில் பரவும். எனவே, குழந்தைகளை தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். இல்லையெனில் வேகமாக மற்றவர்களுக்கு பரவிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இருமல், குமட்டல், வாந்தி, தொண்டை வலி, காய்ச்சல், உடல்வலி மற்றும் வயிற்றுப்போக்கு அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகிறது. இவை குறைந்தது ஒரு வாரம் நீடிக்கும்.
காய்ச்சல் மூன்று நாட்களில் மறைந்து விடும். ஆனால், இருமல் மூன்று வாரத்திற்கு நீடிக்கும். அக்டோபர் முதல் பிப்ரவரி வரை இத்தகைய தாக்கம் ஏற்படுவது சகஜம். குறிப்பாக 15 வயதுக்கு உட்பட்டோரும், ௫௦ வயதுக்கு மேற்பட்டோருக்கும் பாதிப்பு ஏற்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்