சென்னை: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே விண்வெளி தொழில் பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சொந்த நாட்டு செயற்கைகோள்களை மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களையும் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. பல நாடுகள் தொடர்ந்து செயற்கைகோள்களை ஏவ இஸ்ரோவை நாடி வருகின்றன.
இதன் காரணமாக இஸ்ரோவுக்கு கூடுதல் ராக்கெட் ஏவுதளம் தேவைப்படுகிறது. ஏற்கெனவே ஸ்ரீஹரிகோட்டா ஏவு தளத்தில் இருந்து இஸ்ரோ ராக்கெட்டுகளை ஏவி வருகிறது. தேவை அதிகரித்துள்ளதால் ஸ்ரீஹரிகோட்டாவை தாண்டி வேறு இடங்களிலும் ராக்கெட் ஏவுதளங்களை அமைக்க இஸ்ரோ முடிவு செய்தது. ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான உகந்த இடத்தை தேடும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
இதில், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் கடற்கரை பகுதி பூகோள ரீதியாக ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு உகந்த இடமாக கண்டறியப்பட்டது. இதன்படி தற்போது, குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி முழுதும் முடிந்து, சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ராக்கெட் ஏவுதள கட்டுமானத்திற்கான வரைபடம் தயார் நிலையில் உள்ளது. கட்டுமான பணிகளை துவங்கியதும், இரு ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டு,செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ராக்கெட் ஏவுதளத்திற்கு அருகில் விண்வெளி தொழில் பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது. விண்வெளி தொடர்பான நிறுவனங்கள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையிலும், தமிழகத்தில் உள்ள பல்வேறு மின்னணு நிறுவனங்கள், மெக்கானிக்கல் நிறுவனங்கள், மெமிக்கல் நிறுவனங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்படவுள்ளது.