இந்தியா விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்திய விண்வெளி துறையில் அடுத்த முயற்சிகளும் திட்டங்களும் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இப்போது ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்டு வருகின்றன. ஆனால், இன்னொரு ராக்கெட் ஏவுதளம் தேவைப்படுவதை உணர்ந்த மத்திய அரசு, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க இருக்கிறது. இதற்கான 2100 ஏக்கர் நிலம் கையக்கப்படுத்தும் பணிகள் முடிவடைந்து கம்பிவேலிகள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
அங்கு இஸ்ரோவின் சிறிய ரக ராக்கெட்டுகள் ஏவப்பட இருக்கின்றன. இந்நிலையில், அங்கு ராக்கெட் உருவாக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் தொலைவில் இருந்து கொண்டு வந்தாக வேண்டும். இதனை உணர்ந்த தமிழக அரசு குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் இடத்திற்கு அருகாமையிலேயே ராக்கெட் உருவாக்குவதற்கான மூலப் பொருட்களை தயாரிக்கும் விண்வெளி பூங்காவை, டிட்கோ மூலம் அமைக்க திட்டமிட்டது. அமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து, தமிழக அரசின் திட்டம் குறித்து விளக்கியதுடன் மத்திய அரசின் அனுமதியையும் கோரினார்.
மத்திய அரசும் அனுமதி அளித்துள்ள நிலையில், குலசேகரப்பட்டின ராக்கெட் ஏவுதளத்துக்கு மிக அருகாமையில் விண்வெளிப் பூங்கா அமைக்கப்படும் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. மேலும், விண்வெளி சார் தொழிற்பூங்கா அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை உருவாக்குவதற்கான நிறுவனத்தை தேர்வு செய்ய செய்யவும் டிட்கோ சார்பில் டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. இது தமிழக தொழில் வளர்ச்சியில் மேலும் ஒரு மகுடமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.