குழந்தைகளை பாதிக்கும் புதிய வகை வைரஸ்: தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கை!

கொரோனா வைரஸ் பரவலிலிருந்து மெல்ல மீண்டு வந்த நிலையில் இன்ஃப்ளூயன்ஸா ஏஎச்3என்2 வகை வைரஸ் பரவல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புதிய வகை வைரஸ் பரவல் குறித்து ஐசிஎம்ஆர் ஆய்வு மேற்கொண்டது. இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளில் உள்ள ஐசிஎம்ஆரின் 30 ஆய்வகங்களில் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் தற்போது பரவுவது இன்ஃப்ளூயன்ஸா ஏ எச்3என்2 வகையை சேர்ந்த வைரஸ் என்பது தெரியவந்துள்ளது.

என்னென்ன பாதிப்பு?

இந்த வகை வைரஸால் பாதிக்கப்படுபவர்களுக்கு இருமல், தொண்டை வலி, உடல் வலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகின்றன. காய்ச்சல் பாதிப்பு 7 நாட்கள் வரை நீடிக்கிறது.

யார் யார் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்?

50 வயதுக்கு மேற்பட்டோர், 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் இன்ஃப்ளூயன்ஸா ஏ எச்3என்2 வகை வைரஸால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காற்று மாசுபாடும் இந்த வகை வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இன்ஃப்ளூயன்ஸா ஏ எச்3என்2 வகை வைரஸ் பரவல் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “இந்தியா முழுவதும் காய்ச்சல் பரவி வருவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. காய்ச்சலால் உயிரிழப்பு ஏதும் இல்லை. யாரும் உள் நோயாளியாக அனுமதிக்கப்படவில்லை; புறநோயாளிகளாக அதிக பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் வந்தால் 3 நாட்கள் உடல் வலி, தலைவலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றன” என்றார்.

தமிழ்நாட்டில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன?

மேலும் அவர், “தமிழ்நாட்டில் வரும் மார்ச் 10ஆம் தேதி 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற உள்ளன. சென்னையில் 200 இடங்களிலும், கிராமப்புறங்களில் 800 இடங்களிலும் மருத்துவ முகாம் நடைபெறும்.

மக்கள் முகக் கவசம் அணிய வேண்டும், தனி மனித இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். கொசு உற்பத்தியை தடுக்க கவனமுடன் செய்லபட்டு வருகிறோம்” என்றும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.