முன்னாள் முதல்வர் ஓ.பி-எஸ்-ஸின் தாயார் பழனியம்மாள் மறைவுக்கு, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பெரியகுளத்திலுள்ள ஓ.பி.எஸ் இல்லத்துக்கு வருகை தந்து இரங்கல் தெரிவித்தார். பின்னர் ஓ.பி.எஸ்., அவரின் சகோதரர் ஓ.ராஜா, அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை, “கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு தார்மிக அடிப்படையில் தகுந்த மரியாதை வழங்கப்பட வேண்டும். கட்சி நிர்வாகிகள் உணர்ச்சிவசப்படக் கூடாது. தொண்டர்கள் கொள்கை மற்றும் கோட்பாடுகளை மீறிச் செயல்படக் கூடாது.
மேலும், தி.மு.க-வைப் பொறுத்தவரை, அவர்களின் அரசியல் கொள்கை எப்போதுமே பிரிவினைவாதம்தான். பிரிட்டிஷ் அரசுபோல தி.மு.க செயல்படுகிறது. வடக்கு – தெற்கு என்று அப்போதே `Dravidistan’ வேண்டும் என்று கேட்டவர் தந்தை பெரியார். அவர்களது வழித்தோன்றல்களாக இன்று தி.மு.க-வினர் இருக்கின்றனர். அதை அம்பேத்கர் ஆதரிக்கவில்லை. அப்போதே அதையெல்லாம் மறைத்துவிட்டு, தற்போது தி.மு.க-வினர் `ஒரு யுனைடெட் இந்தியா’ வேண்டும் என்று பேசுவது பித்தலாட்டம்.

வடமாநிலத்தவருக்கு ஆதரவாகப் பேசியதை விட்டுவிட்டார்கள். தி.மு.க தலைவர்கள் குறித்துப் பேசியதால் வழக்கு பதிவுசெய்கிறார்கள். பிரசாந்த் கிஷோரும், நான் கூறிய அதே கருத்தைத்தான் ட்விட்டர் வாயிலாகத் தெரிவித்திருந்தார். அப்படியென்றால் அவர்மீதும் வழக்கு தொடுப்பார்களா… இத்தனை நாள்களாக எங்களுக்கு எதிராக தினகரன், முரசொலி உள்ளிட்ட பத்திரிகைகள்தான் எழுதுவார்கள். ஆனால், தற்போது போலீஸாரும் அதே பாணியில் எங்களுக்கு எதிராக நடந்துகொண்டு, எங்கள்மீது வழக்கு பதிவுசெய்திருப்பது வருந்தத்தக்கது” என்றார்.