இஸ்லாமாபாத் :”போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தன் வீட்டின் சுவரேறி குதித்தார்,” என, அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரானா சனாவுல்லா தெரிவித்துள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியைத் துவங்கிய இம்ரான் கான், 2018ல் அந்நாட்டு பிரதமரானார்.கடுமையான பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால், கடந்த ஆண்டு ஏப்ரலில் இவர் ஆட்சி கவிழ்ந்தது.
இதையடுத்து, புதிய பிரதமராக பொறுப்பேற்ற ஷெபாஸ் ஷெரீபின் அரசை எதிர்த்தும், பொதுத் தேர்தலை விரைந்து நடத்த வலியுறுத்தியும் இம்ரான் கான் போராட்டங்களை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், பதவியில் இருந்தபோது வெளிநாட்டு தலைவர்கள், முக்கிய பிரமுகர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிசுகளை, அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் சொத்து சேர்த்ததாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகாததால், கடந்த மாதம் 28ம் தேதி நீதிமன்றம் பிடிவாரன்டு பிறப்பித்தது. இதையடுத்து, இம்ரானை கைது செய்ய லாகூரில் உள்ள அவரது வீட்டிற்கு சமீபத்தில் போலீசார் சென்றபோது, அங்கு குவிந்திருந்த அவரது கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சோதனையின்போது இம்ரான் வீட்டில் இல்லாததால், ஏமாற்றமடைந்த போலீசார் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில், கைது நடவடிக்கையில் இருந்து தப்ப, இம்ரான் கான் தன் வீட்டின் சுவரேறி குதித்து வெளியே சென்றதாக, பாக்., உள்துறை அமைச்சர் ரானா சனாவுல்லா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
நீதிமன்ற உத்தரவு குறித்து தெரிவிக்கவே போலீசார் இம்ரான் வீட்டுக்கு சென்றனர். ஆனால், அவர் அங்கிருந்து தப்பியோடி, வேறொரு இடத்தில் இருந்து உரையாற்றினார். இந்த வழக்கில் இருந்து அவரை நீதிமன்றம் விடுவித்தால், நாங்கள் ஏற்றுக்கொள்ள தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்