சுற்றுலா ,வர்த்தகத் துறைகளில் இந்திய ரூபாவின் பயன்பாடு இலங்கையின் பொருளாதார மீட்சிக்கும் வளர்ச்சிக்கும் உதவுகின்றது

இந்தியா இலங்கை இடையிலான பொருளாதார பரிவர்த்தனைகளுக்காக இந்திய ரூபாவினைப் பயன்படுத்துவது குறித்த கலந்துரையாடலொன்று 2023 மார்ச் 02ஆம் திகதி இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

இலங்கை வங்கி, ஸ்டேட் பாங்க் ஒப் இந்தியா, மற்றும் இந்தியன் வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகள் தமது அனுபவங்களை இங்கு பகிர்ந்துகொண்டதுடன் இலங்கை மத்திய வங்கி மற்றும் இந்திய ரிசேர்வ் வங்கி ஆகியவற்றால் 2022 இல் வழங்கப்பட்ட நடைமுறைப்படுத்தல் கட்டமைப்பின் அடிப்படையில் Vostro/Nostro கணக்குகள் ஊடாக இந்திய ரூபா அடிப்படையிலான வர்த்தக பரிவர்த்தனைகளை தாம் ஏற்கனவே ஆரம்பித்திருப்பதாக இவ்வங்கிகள் இங்கு தெரிவித்திருந்தன. குறுகிய காலக்கெடு, குறைந்த பரிமாற்ற கட்டணங்கள், இலகுவான வர்த்தக கடன் வசதிகள் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்திய ரூபா மூலமாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் மூலமாக கிடைக்கப்பெறுகின்றமை குறித்து இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த வங்கிகளால் கூறப்பட்டிருந்தது. வருமான அறவிட்டினை அதிகரிக்க உதவுவதில் அதன் பங்கு உட்பட சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் இந்த முன்முயற்சி காரணமாக ஏற்பட்டுள்ள நன்மைகள் மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்தும் இத்திட்டத்தினை ஏனைய துறைகளில் பயன்படுத்துதல் குறித்தும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

2. இந்த நிகழ்வில் இந்திய ரிசேர்வ் வங்கியின் அதிகாரிகளும் மெய்நிகர் மார்க்கம் மூலமாக பங்கேற்றிருந்ததுடன் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள மூலதன கணக்கு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் தெரிவுக்கு புறம்பாக பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக நடைமுறைக் கணக்குகளையும் இந்திய ரூபாவினைப் பயன்படுத்தி மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் குறித்து சுட்டிக்காட்டியிருந்தனர். இலங்கை மத்திய வங்கியுடனான நெருக்கமான ஒத்துழைப்பினையும் வலியுறுத்திய இந்திய ரிசேர்வ் வங்கி அதிகாரிகள், இந்த செயற்பாடுகளை மேலும் ஒழுங்கமைப்பதற்காக இந்திய ரிசேர்வ் வங்கியானது அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.

 3. இதேவேளை இங்கு உரை நிகழ்த்தியிருந்த நிதித்துறை இராஜாங்க அமைச்சர் கௌரவ ஷெகான் சேமசிங்க அவர்கள், இலங்கைக்காக சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா வழங்கிய வலுவான உத்தரவாதம் உட்பட கடந்த வருடம் இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதி ரீதியான மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான ஆதரவினையும் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான பொருளாதார ஒத்துழைப்பினையும் பாராட்டியிருந்தார். இங்கு உரை நிகழ்த்திய இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அவர்கள் இந்திய ரூபாயில் வர்த்தக ரீதியிலான பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு இலங்கை மற்றும் இந்திய வர்த்தக சமூகத்தினர் மத்தியில் காணப்படும் வலுவான கோரிக்கைகள் குறித்து குறிப்பிட்டிருந்தார். அத்துடன் நடைமுறைக் கணக்கு மற்றும் முழு அளவிலான மூலதன கணக்கு ஆகியவற்றின் பரிமாற்றங்களுக்காகவும் இந்த வசதியினை விஸ்தரிப்பதற்கும் அவர் இந்தச் சந்தர்ப்பத்தில் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிகழ்வில் 300க்கும் அதிகமானோர் நேரடியாக பங்கேற்றிருந்த அதே சமயம் பலர் இணைய ரீதியாகவும் இணைந்து கொண்டிருந்த நிலையில் இந்தியா மற்றும் இலங்கையிருந்தும் பல்வேறு துறைகளையும் சேர்ந்த முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் பங்கு பெற்றிருந்தமையை மத்திய வங்கியின் ஆளுநர் பாராட்டியிருந்தார்.

4. வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை முதன்மையாகக் கொண்ட செயற்பாடுகள் மூலமாக இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவானதும் நெருக்கமானதுமான பொருளாதார ஒத்துழைப்பினை கட்டி எழுப்புவதற்கான கூட்டு முயற்சிகளில் இந்த முன்னெடுப்பானது நேர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்துமென இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் மேன்மைதங்கிய கோபால் பாக்லே அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான டிஜிட்டல் முறையிலான கொடுப்பனவுகள், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார நட்புறவினை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், டிஜிட்டல் கொடுப்பனவுத் துறையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர் இங்கு எடுத்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

5. இந்தக் கலந்துரையாடலில் இலங்கை மத்திய வங்கியின் உயரதிகாரிகள், இலங்கை அரசாங்கத்தைசேர்ந்த அதிகாரிகள், சுற்றுலாத்துறை, ஊடகத்துறை மற்றும் வங்கித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்தனர். இதேவேளை இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள், இந்திய அரசாங்கத்தை சேர்ந்த உயரதிகாரிகள், வர்த்தக மற்றும் உற்பத்தித் துறை சார்ந்த சங்கங்களின் பிரதிநிதிகள், ஏற்றுமதி ஊக்குவிப்பு சபைகளின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் மெய்நிகர் மார்க்கமூடாக இந்தியாவிலிருந்து பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
03 மார்ச் 2023

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.