புதுடெல்லி: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ), இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஐஏஐ) ஆகியவை இணைந்து, தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் நடுத்தர ரக ஏவுகணையை (எம்ஆர்எஸ்ஏஎம்) வடிவமைத்தன. இதை பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த ஏவுகணையின் திறனை பரிசோதிக்க இந்திய கடற்படை திட்டமிட்டது. இதன்படி ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பலில் இருந்து எம்ஆர்எஸ்ஏஎம் ஏவுகணை நேற்று ஏவப்பட்டது. அப்போது ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை எட்டியதாகவும் இந்த சோதனை வெற்றி பெற்றதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை, 70 கி.மீ. தொலைவில் வரும் எதிரி நாடுகளின் போர் விமானம், ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்தது என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.