திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாசி தெப்ப உற்சவத்தையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த ஆண்டிற்கான தெப்ப விழாவையொட்டி பக்தர்கள் கடந்த ஒரு வார காலமாகவே அதிகளவில் கூட்டமாக தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று அதிகாலை முதல் டூவீலர்கள், கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் தொடர்ந்து வந்து சென்று கொண்டிருந்தனர்.
மேலும் திருப்புத்தூரிலிருந்து சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இந்த வழித்தடத்தில் சென்று வந்தது. இதில் சரியான திட்டமிடுதல் இல்லாததாலும், தகுந்த முன் ஏற்பாடுகள் செய்யாததாலும் வாகனங்கள் சாலையிலே பல மணி நேரங்கள் காத்திருந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வெகு தூரத்தில் இருந்து பயணித்த பயணிகள் இவ்வாறு பல மணி நேரம் காத்திருந்ததால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் பல்வேறு அவதிகளுக்கு உட்பட்டனர்.
ஆகையால் மாவட்ட நிர்வாகம் இன்று நடைபெற உள்ள தெப்ப திருவிழாவிற்கு தகுந்த முன் ஏற்பாடுகள் செய்து வாகனங்கள் சிரமம் இன்றி சென்றுவர ஏற்பாடு செய்யுமாறு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.