திருமருகல் அருகே பருத்திக்கு மாற்றாக சாமந்திப்பூ சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

நாகப்பட்டினம் : திருமருகல் அருகே பருத்திக்கு மாற்றாக சாமந்திப்பூ தோட்ட கலைத்துறை உதவியுடன் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே கொத்தமங்கலம், அகர கொந்தகை, ஆலத்தூர், ஏர்வாடி, கீழபூதனூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உளுந்து, பருத்தி ஆகியவை சாகுபடி செய்து வந்தனர். இந்நிலையில் முதல் முறையாக தோட்டக்கலைத்துறை சார்பில் வழங்கப்பட்ட 100 சதவீத மானியத்தில் சாமந்திப்பூ சாகுபடி செய்துள்ளனர். சாமந்தி பூ நல்ல மகசூலை கொடுத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லில் ஊடுபயிராக உளுந்து பயிறு உள்ளிட்ட பயிறு வகைகளை விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர்.

இந்நிலையில் சோதனை முறையில் மாற்று பயிராக சாமந்திப்பூ சாகுபடி செய்தனர். இதற்காக நாற்றுகள், இடுபொருள்கள், உரம் உள்ளிட்ட அனைத்தும் ஏக்கருக்கு ரூ.16 ஆயிரம் வரை முழு மானியத்துடன் தோட்டக்கலை துறை வழங்கி விவசாயிகளை உற்சாகப்படுத்தியுள்ளது. இதனை நல்ல முறையில் விவசாயிகள் பயன்படுத்தி திருமருகல் பகுதியில் சாமந்திப்பூ சாகுபடி செய்துள்ளனர்.

ஒரு கிலோ சாமந்திப்பூ ரூ. 50 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுவதால் அதிகம் லாபம் கிடைக்கிறது. திருமருகல் பகுதியில் பறிக்கப்படும் பூக்களை காரைக்கால், நாகப்பட்டினம், திருமருகல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பூ வணிகர்கள் தோட்டத்திற்கு வந்து கொள்முதல் செய்வதால் விற்பனை எளிமையாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.