நாமக்கல் மாவட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு வரும் 10ஆம் தேதி இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் அமைந்துள்ள, வேளாண் அறிவியல் மையத்தின் (கே.வி.கே) தலைவர் டாக்டர் அழகுதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது,
• நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் மார்ச் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, தென்னையில் ஒருங்கிணைந்த முறையில் கூன் வண்டு மேலாண்மை முறைகள், என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
• இந்தப் பயிற்சியில், தென்னை மரங்களைத் தாக்கும் கூன் வண்டின் சேதத்தின் அறிகுறிகள், அதன் வாழ்க்கை சுழற்சி மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள், அதாவது உழவியல் முறை, ராசயன முறை மற்றும் உயிரியியல் முறையில் கட்டுப்படுத்துதல் பற்றி தெளிவாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
• இந்த பயிற்சி முகாமில் விவசாயிகள், விவசாயம் சார்ந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
• இந்த பயிற்சி முகாமிற்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.
• மேலும் இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள விவசாயிகள், 04286- 266345 மற்றும் 266650 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.