தோழிக்கு செல்போனில் தொல்லை கொடுத்ததை தட்டிக்கேட்ட கல்லூரி மாணவரை மதுபாட்டினால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கூத்தலூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் சுதந்திரன்(21) திருப்பத்தூரில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சுதந்திரனுடைய தோழி ஒருவருக்கு கல்லல் பகுதியை சேர்ந்த பிரகாஷ் மற்றும் மணி பிரகாஷ் ஆகிய இரண்டு பேர் செல்போனில் தொடர்பு கொண்டு அவதூறாக பேசி தொல்லை கொடுத்துள்ளனர்.
இதனை அந்தப் பெண் சுதந்திரனிடம் கூறியுள்ளார். இதையடுத்து சுதந்திரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து தோழிக்கு தொல்லை கொடுத்த இரண்டு பேரையும் எச்சரித்துள்ளார். இந்நிலையில் நேற்று கல்லல் பகுதியில் நடைபெற்ற கோவில் விழாவில் கலந்து கொண்ட சுதந்திரம் மற்றும் அவரது நண்பர்கள், மீண்டும் வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது விநாயகபுரம் அருகே மணி பிரகாஷ், பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் போதையில் சுதந்திரனிடம் தகராறு செய்துள்ளனர். இதில் தகராறு முற்றிய நிலையில், மது பாட்டிலால் சுதந்திரனின் தலையில் அடித்துள்ளனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சுதந்திரன் சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு சுதந்திரன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார், மணி பிரகாஷ் மற்றும் பிரகாஷ் உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.