லண்டன்: லண்டனில் கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் நடந்த நிகழ்ச்சிகளில், அங்கு சார்பு துணைவேந்தராக இருக்கும், பாகிஸ்தானை சேர்ந்த கமால் முனீருடன் காங்கிரஸ் எம்.பி., ராகுல் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
உரை
காங்கிரஸ் எம்.பி., ராகுல், பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் ஜட்ஜ் பிசினஸ் ஸ்கூலின்(ஜேபிஎஸ்) கவுரவ விரிவுரையாளராக இருக்கும் ராகுல் ’21ம் நூற்றாண்டின் கேட்டலுக்கான கற்றல்’ என்ற மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். கருத்தரங்கிலும் பேசினார்.
பாக்., அரசில் பணி
இந்த பல்கலையின் துணைவேந்தரான கமால் முனீரும் இந்த விழாவில் பங்கேற்றார். இந்த கமால் முனீர், பாகிஸ்தானை சேர்ந்தவர். பாக்., ரிசர்வ் வங்கி, உலக வங்கி, ஆசிய வங்கி ஆகியவற்றிலும், கமால் முனீர் பணியாற்றியதுடன், பாகிஸ்தான் தொழில்துறை கொள்கையை வகுத்த குழுவிலும் கடந்த 2010ம் ஆண்டு உறுப்பினராக இருந்துள்ளார்.
பாகிஸ்தான் அரசின் துறைகளிலும் பணியாற்றி உள்ளதாக தெரிகிறது. கேம்ப்ரிட்ஜ் பல்கலை சார்பு துணைவேந்தர் பதவியுடன், அங்கு உத்திகள் மற்றும் கொள்கைகள் துறையின் பேராசிரியராகவும் அவர் உள்ளார்.
ஒரே மேடை
இங்கு நடந்த விழாவில் ராகுல் பேசும் போது கமால் முனீர் அருகில் உள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் அரசில் இடம் பெற்றிருந்த நபர் இருந்த மேடையில், ராகுல் பேசியது இந்தியாவில் பலரிடம் கண்டன குரல்களை எழுப்ப வைத்துள்ளது.
ராகுல் பேசும்போது, இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்புகள் கொடூரமான தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன. இதற்கு எதிராக குரல் கொடுக்கவே இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஊடகங்கள், நிறுவன கட்டமைப்புகள், நீதித்துறை, பார்லிமென்ட் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதால், மக்களின் குரல் ஒடுக்கப்படுகிறது. இவ்வாறு ராகுல் பேசினார்.
விளக்கம் கேட்பு
இது தொடர்பாக பா.ஜ.,வின் செய்தித்தொடர்பாளர் ஷெஜாத் பூனவாலா கூறும் போது, ராகுல், அன்னிய மண்ணில் நமது இறையாண்மையைத் தாக்கி உள்ளார். தற்போது, இந்தியாவையும், இந்திய அமைப்புகளையும் குறைத்து மதிப்பிட்ட ராகுல், பாகிஸ்தானை சேர்ந்தவருடன் மேடையை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து ராகுல் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்