தமிழ்நாட்டில் நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், உலகத்தர உள்கட்டமைப்பு மற்றும் உண்டு – உறைவிட வசதியுடன் மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படவுள்ள 15 அரசு மாதிரி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலர் சுதன் அறிவித்திருந்தார்.
இதற்க்கு பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும், ஆசிரியர் கூட்டமைப்பும் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது.
மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்கள் படுவதால் தான், அந்த நுழைவு தேர்வை தமிழக அரசும், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும் எதிர்க்கின்றன.
இப்படி நீட் தேர்வை எதிர்த்துக் கொண்டு, தமிழக அரசின் பள்ளிகளில் பத்தாம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்துவது என்ன வகையான சமூகநீதி? என்று பல்வேறு தரப்பிலும் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்நிலையில், அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு எவ்வித நுழைவுத் தேர்வும் நடத்தப்படாது என்று, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார்.
மேலும், அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து தெளிவான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும், அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார்.