மகளிர் இலவச பயணம் திட்டம்: வெள்ளை அறிக்கை கேட்கும் ராஜன் செல்லப்பா

பெண்கள் இலவச பேருந்து திட்டத்தில் 1300 கோடி ஊழல் நடந்திருக்கிறது என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி நிதியின் கீழ் திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் பள்ளி கட்டடத்திற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பூமி பூஜை விழாவை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து., செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராஜன் செல்லப்பா, “50 லட்சம் மதிப்புள்ள கட்டிடத்திற்கு பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. கடந்த 2 நாட்களாக மதுரையில் முதல்வர் கள ஆய்வு செய்துள்ளார். கள ஆய்வு குறித்து முறையான முடிவுகள் வெளிவரவில்லை. உள்ளாட்சி பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை. முதல்வர் ஆய்வின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் யாரையும் அழைக்கவில்லை. இந்த கள ஆய்வு குறித்த முடிவு தெரியவில்லை.

திருப்பரங்குன்றம் தொகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு சட்ட சபையில் முதல்வர் மற்றும் ஊராட்சி நகர்ப்புற அமைச்சர் உள்ளிட்டோர் அறிவித்தனர். இதுவரை அந்த திட்டதிற்கு அறிக்கை வெளியிடவில்லை. மதுரை மாவட்டத்தில் குடிநீர் கிடைப்பதற்காக ஆய்வு மேற்கொண்டதில் விடை கிடைத்ததா, அறிவிக்கப்பட்ட டைட்டில் பார்க் குறித்து ஆய்வு செய்தார்களா, அறிவிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் வழித்தடங்கள் பற்றி ஆய்வு செய்தாரா என எதுவுமே இல்லை.

கோடை காலம் வர இருக்கிறது. வைகை அணையில் 54 அடிக்கு கீழ் தண்ணீர் வந்து விட்டது. கோடைகாலத்தில் மக்களுக்கு குடிநீருக்காக இந்த அரசு என்ன செய்ய உள்ளது? எய்ம்ஸ் மருத்துவமனை 2026 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் என சட்டமன்ற உறுப்பினராக நான் கேட்டதற்கு மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், தமிழக முதல்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி குறித்து துறை அமைச்சரை ஜப்பான் ஜைக்கா நிதி நிறுவனத்திடம் சென்று கேட்க உள்ளார்களா.?

இன்றைக்கு தமிழகத்தில் பள்ளி அருகிலே புகையிலை பொருட்கள் விற்கப்படுவதை தடுப்பதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?

மதுரையில் கள ஆய்வு செய்த முதல்வர் கீழடி அருங்காட்சியகம் திறந்து வைத்தார். இந்த திட்டம் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்தது அதிமுக.

திருப்பரங்குன்றம் ரோப் கார் திட்ட பணி எப்பொழுது தொடங்கும்? சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரியல் எஸ்டேட் டாஸ்மாக் பல்வேறு கட்டிட வகைகள் மற்றும் சினிமா துறை என அனைத்திலும் திமுகவினர் ஆக்கிரமித்தது போல தனியார் பேருந்துகளை இயக்குவதன் மூலம் போக்குவரத்து துறையும் திமுகவினர் ஆக்கிரமித்துக் கொள்ள ஏற்பாடு செய்து வருகின்றனர். அதற்கான முயற்சி தான் இது.

ஏற்கனவே பெண்களுக்கு இலவச பேருந்து என்ற திட்டம் இருந்து வருகிறது. தனியாருக்கு பேருந்துகள் விடுவதன் மூலம் மகளிர் இலவசமாக பயணம் செய்ய முடியுமா? திமுக அரசு பெண்களுக்கு என கொண்டு வந்த திட்டம் இலவச பேருந்து திட்டம். அந்தத் திட்டத்தையும் முடக்குவதற்கு இந்த அரசு வழிவகை செய்கிறது. 20 பெண்கள் பயணிக்கும் பேருந்தில் 50 பெண்கள் பயணம் செய்தார்கள் என போலியாக கணக்கு காட்டி 1300 கோடி ஊழல் செய்திருக்கிறது. போக்குவரத்து துறை அமைச்சரால் பெண்கள் இலவச பேருந்து குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா” என்று கேள்வி எழுப்பினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.