கரூர் மாவட்டம், குளித்தலையில் பிரசித்திப்பெற்ற கடம்பவனேஸ்வரர் திருக்கோயிலானது குபேர திசையெனப் போற்றப்படும் வடதிசையை நோக்கி அமைந்துள்ள திருத்தலமாகும். இங்கு ஈசன் அருள்மிகு முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேஸ்வரராக அருள்பாலிக்கிறார். இந்தத் திருக்கோயில் மாசிமக பிரம்மோற்சவம், வருடாவருடம் 13 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த வருடம் நடைபெறும் இந்தத் திருவிழாவானது கடந்த மாதம் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் உற்சவ மூர்த்திகள் வீதி உலா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

இதையடுத்து, இன்று திருச்சி மாவட்டம், திருஈங்கோய்மலையில் உள்ள மரகதம்பாள் உடனுறை மரகதாசலேசுவரர் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, குளித்தலைக்குக் கொண்டு வரப்பட்டார். அவருக்கு குளித்தலை கடம்பவனேசுவரர் கோயில் அருகே சந்திப்பு தீபாராதனை நடைபெற்றது.
பின்னர், திருஈங்கோய்மலைநாதர் மற்றும் குளித்தலை அருள்மிகு முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேசுவரர் வீதியுலா சென்று கடம்பந்துறை காவிரி நதிக்கரையில் எழுந்தருளினர்.
இந்த நிகழ்வையொட்டி, வழிநெடுகிலும் பக்தர்கள் மஞ்சள் நீராடுதலுடன் ஊர்வலமாகச் சென்றனர். இரண்டு கோயில்களின் அஸ்டதேவர்களுக்கும் பூஜைகள் செய்யப்பட்டு, காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனிதநீராடி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.