வதந்திகளை நம்ப வேண்டாம்: வட இந்திய தொழிலாளர்களிடம் நேரில் பேசிய ஸ்டாலின்

திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு பகுதியில் அமைந்துள்ள கையுறை தயாரிக்கும் தனியார் நிறுவனத்திற்கு நேரில் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கு பணிபுரியும் பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (7.3.2023) திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு பகுதியில் அமைந்துள்ள கையுறை தயாரிக்கும் நிறுவனமான கானம் லேட்டக்ஸ் இன்டஸ்டீரிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு நேரில் சென்று, அங்கு பணிபுரியும் பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.

கையுறை தயாரிக்கும் நிறுவனமான கானம் லேட்டக்ஸ் இன்டஸ்டீரிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் மொத்தம் சுமார் 450 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களில் 30 தொழிலாளர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அத்தொழிலாளர்களுடன், எத்தனை ஆண்டுகளாக இங்கு பணிபுரிந்து வருகிறீர்கள், பணிச்சூழல் எப்படி இருக்கிறது, இங்குள்ள மக்கள் உங்களுடன் நல்ல முறையில் பழகுகிறார்களா, உங்களுக்கு இங்கு ஏதாவது இடர்பாடுகள் இருக்கிறதா என்று கேட்டு கலந்துரையாடினார்.

அதற்கு அத்தொழிலாளர்கள், சிலர் ஆறு ஆண்டுகளாகவும், பலர் ஓராண்டு முதல் இரண்டாண்டு காலமாக இங்கு பணிபுரிந்து வருவதாகவும், சிலர் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருவதாகவும், தங்களது பணிச்சூழல் மிகவும் நல்ல முறையில் இருப்பதாகவும், நிறுவனத்தில் தரமான உணவு, தங்குமிடம் உட்பட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன என்றும், இங்குள்ள மக்கள் தங்களுடன் சகோதரத்துடத்துடன் பழகுவதாகவும், தங்களுக்கு இங்கு எந்தவித அச்ச உணர்வும் இல்லாமல் தங்களது சொந்த ஊரில் இருப்பது போலவே பாதுகாப்பாக வாழ்வதாகவும் தெரிவித்தார்கள்.

மேலும், அத்தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு வழங்கி வருவதற்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரிவித்துக் கொண்டனர்.

அப்போது, முதல்வர் ஸ்டாலின் அத்தொழிலாளர்களுடன் உரையாடியபோது, எந்தவித வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்றும், தமிழ்நாடு அரசு அனைத்து மாநில தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பான பணிச்சூழலை அளித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என். ஸ்ரீதர், கானம் லேட்டக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பிரவீன் மேத்யூ மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.