வரும் 2024 மக்களவை தேர்தலை ஓபிஎஸ் தலைமையில் அதிமுக சந்தித்து வெற்றி பெறும் என்று, ஓபிஎஸ் ஆதரவாளர், முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் அதிகார்பூரமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், “அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை பழனிசாமி அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கிறார் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை விடுத்தவுடன், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், உண்மைக்கு மாறான தகவல்களை அறிக்கை மூலம் வெளியிட்டிருந்தார்.
அதில், “பன்னீர்செல்வத்தை அரவணைத்து துணை முதல்வர், கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பழனிசாமி வழங்கினார்” என குறிப்பிட்டுள்ளார். முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொள்ள பன்னீர்செல்வத்தை அணுகி, ஆட்சியை காப்பாற்றுங்கள் என்று மன்றாடியவர் பழனிசாமி.
2017-ம் ஆண்டு பன்னீர்செல்வம் ஆதரவு அளிக்காமல் இருந்திருந்தால் அன்றே பழனிசாமி ஆட்சி அஸ்தமனமாகி இருக்கும். சட்டப்பேரவையில் கருணாநிதி குறித்து ஓபிஎஸ் பேசியது, 1950, 60-களில் நடந்தவை. அப்போது எம்ஜிஆரே திமுகவுக்கு பிரச்சாரம் செய்தார்.
மத்திய அரசு திட்டங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்த குழுவில் எம்.பி. ரவீந்திரநாத் குமார் பங்கேற்று மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்தார்.
ஓபிஎஸ் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று கூறுவது பண்பற்ற செயல். கோடநாடு கொலை வழக்கு தாமதப்பட்டு வருகிறது. திமுகவுடன் தொடர்புவைத்திருப்பவர்கள் பழனிசாமியும், அவரது கூட்டாளிகளும்தான்.
மக்கள் முடிவுக்கு மாறாக செயல்படும் பழனிசாமி மற்றும் அவரது கூட்டாளிகளை விரட்டி அடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.2024 மக்களவை தேர்தலை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் அதிமுக சந்தித்து வெற்றி பெறும்” என்று வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.