உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட 85 வயது முதியவர் ஒருவர் தன்னுடைய ரூ.1.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு வழங்குவதாக எடுத்துள்ள முடிவு பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் நாதூர் சிங். இவருக்கு ஒரு மகன், 4 மகள்கள் இருக்கின்றனர். மகள்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் சகரான் பூரில் வசித்து கொண்டு பள்ளி ஆசிரியராக வேலை பார்க்கிறார்.
மேலும், நாதூர் சிங்கிற்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் சொத்து இருக்கிறது. இப்படியான சூழலில் மனைவி இறந்த பிறகு தனியாக வசித்து வந்த நாதூர் சிங் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு முதியோர் இல்லத்துக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், 5 பிள்ளைகள் இருந்தும் யாரும் தன்னை காண வராததால் மனமுடைந்த நாதூர் சிங் தன்னுடைய ரூ.1.50 கோடி மதிப்புடைய சொத்தை உத்திரப்பிரதேச அரசுக்கு உயில் எழுதி வைத்திருக்கிறார்.
அந்த உயிலில் தான் இறந்த பிறகு தனக்கு சொந்தமான இடத்தில் மருத்துவமனை அல்லது பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்றும் தன் உடலை ஆராய்ச்சி, கல்வி பணிகளுக்காக மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். முதியவரின் முடிவு வெளியுலகுக்கு தெரிய வந்த பிறகும் இதுவரை அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் நாதூர் சிங்கிடம் பேச முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே நாதூர் சிங்கின் உயில் தங்களுக்கு கிடைத்திருப்பதாகவும், அவர் இறந்த பிறகு அவரது நிலத்தை அரசு எடுத்து கொள்ளும் என்றும் முசாபர் நகர் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.