கராச்சி:பாகிஸ்தானில் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் ஒன்பது போலீசார் பலியாகினர். 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள காம்ப்ரி பாலம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக, 20க்கும் மேற்பட்ட போலீசார் வாகனத்தில் சென்றனர்.
அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபர், தான் உடலில் மறைத்து வைத்திருந்த சக்திவாய்ந்த குண்டை வெடிக்க செய்தார்.
பயங்கர சத்தத்துடன் வெடித்ததில், வாகனத்தில் வந்த போலீசார் உடல் சிதறி பலியாகினர். இதில் சம்பவ இடத்திலேயே ஒன்பது பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் குண்டு வெடிப்பில் சிக்கியவர்களை மீட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதியில் வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். இதுகுறித்து போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement