காசர்கோடு ;தங்களுடைய சொத்துக்கள், தங்களுடைய மூன்று பெண் குழந்தைகளுக்கும் முழுமையாக கிடைப்பதை உறுதி செய்வதற்காக, கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் தம்பதி, ௨௯ ஆண்டுக்குப் பின் மீண்டும் திருமணம் செய்தனர்.
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் மற்றும் நடிகர் சுக்குர். இவருடைய மனைவி டாக்டர் ஷீனா, மஹாத்மா காந்தி பல்கலையின் முன்னாள் இணை துணை வேந்தராக பணியாற்றியவர்.
இவர்களுக்கு, ௧௯௯௪ல், இஸ்லாமிய முறைப்படி, ஷரியத் சட்டத்தின் கீழ் திருமணம் நடந்தது. தற்போது, ௨௯ ஆண்டுக்குப் பின், இருவரும், சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் நேற்று பதிவுத் திருமணம் செய்தனர்.
இந்த திருமணத்தில் அவர்களுடைய மகள்களும் பங்கேற்றனர்.
இந்த திருமணம் குறித்து சுக்குர் கூறியதாவது:
எங்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்; ஆண் குழந்தைகள் இல்லை. முஸ்லிம் தனிநபர் வாரியச் சட்டத்தின்படி ஆண் வாரிசு இல்லாததால், எங்களுடைய சொத்தில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே எங்களுடைய மகள்களுக்கு கிடைக்கும். மீதமுள்ள சொத்து, என்னுடைய சகோதரர்களுக்கே கிடைக்கும்.
மேலும், இந்த சட்டத்தின்படி, உயில் எழுதியும் வைக்க முடியாது.
எங்களுடைய சொத்துக்கள் முழுமையாக எங்களுடைய மகள்களுக்கு கிடைப்பதற்காக என்ன செய்வது என்று யோசித்தோம். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இரண்டு முறை மரணத்தின் விளிம்புக்கு சென்று திரும்பினேன்.
அதனால், எங்களுடைய மகள்களுடைய எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக, தற்போது சிறப்பு திருமண சட்டத்தில் திருமணம் செய்துள்ளோம். இதன் வாயிலாக எங்களுடைய சொத்துக்கள் முழுமையாக மகள்களுக்கு கிடைக்கும்.
எங்களுடைய இந்த நடவடிக்கை, முஸ்லிம் தனிநபர் சட்டத்துக்கு எதிரானது அல்ல. அதை நாங்கள் மதிக்கிறோம்.
அதே நேரத்தில் அரசியல் சாசனத்தின்படி, எங்களுடைய மகள்களுக்கு சொத்துக்கள் கிடைக்கவே இந்த பதிவுத் திருமணம் செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்