தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசிக்குப் பதிலாகச் சிறு தானியங்கள் வழங்கப்படும் என சமீபத்தில்உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருந்தார். அதன் சோதனை முயற்சியாக நீலகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஒரு குடும்ப அட்டைக்கு 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்பட்டது.

அதில் நீலகிரி மாவட்டத்தில் மாதம் 440 டன்னும் தர்மபுரியில் 920 டன் கேழ்வரகும் தேவைப்படுகிறது. அதுவே தமிழகத்தில் உள்ள மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 1 கிலோகேழ்வரகு வழங்கினாலும் ஆண்டுக்கு 2.67 லட்சம் டன் தேவைப்படுகிறது.
ஆனால், தற்போது வரை தமிழகத்தில் ஆண்டுக்குச் சராசரியாக 2 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படும்கேழ்வரகு பயிரில் 2.20 லட்சம் டன் கேழ்வரகு அறுவடை செய்யப்படுகிறது. எனவே, குடும்பஅட்டைத்தாரர்களுக்கு வழங்கப் பற்றாக்குறையாக உள்ள கேழ்வரை இந்திய உணவு கழகத்திடம் இருந்துகொள்முதல் செய்து தருமாறு மத்திய அரசுக்குத் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் விளையும் கேழ்வரகில் 90% பயிர் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில்இருந்து கிடைக்கிறது. மீதமுள்ளவை சேலம் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து கிடைக்கிறது. கேழ்வரகு கொள்முதல் செய்வதற்காக தர்மபுரி , பெண்ணாகரம், ஓசூர், சூளகிரி போன்ற பல இடங்களில் 9 நேரடி கொள்முதல் நிலையங்களை அமைத்துள்ளது தமிழக நுகர்பொருள் வாணிபக்கழகம். இவற்றில்கிலோவுக்கு ரூ. 35.78 காசு வழங்கப்படுகிறது. அரசு கேழ்வரகு கொள்முதல் செய்யும் தகவல் பல விவசாயிகளைச் சென்றடையாததால் இதுவரை 191 டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.