திருவனந்தபுரம்: கேரளாவில் 10 வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்கியது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நாளை (10ம் தேதி) தொடங்குகிறது. கேரளாவில் 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது. வரும் 29ம் தேதி தேர்வுகள் முடிவடைகிறது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நாளை (10ம் தேதி) தொடங்கி 30ம் தேதி நிறைவடைகிறது. மொத்தம் 4,19,554 மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வும், 4,25,361 மாணவர்கள் பிளஸ் 1 தேர்வும், 4,42,067 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வும் எழுதுகின்றனர்.
அனைத்து தேர்வுகளும் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. 10ம் வகுப்பு தேர்வுக்காக மொத்தம் 2,960 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வளைகுடா நாடுகளில் 518 மாணவர்களும், லட்சத்தீவில் 289 மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர். 10ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் 70 மையங்களில் ஏப்ரல் 3ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 3ம் தேதி தொடங்கி மே முதல் வாரத்தில் நிறைவடையும்.