புதுடில்லி,:புதுடில்லியில், அனுமன் கோவிலுக்கு மிக அருகே பிரசாதம் விற்பனை செய்யும் கடை வைத்துள்ள நபருக்கு, மட்டன் குருமாவை, ‘டெலிவரி’ செய்ய முடியாது என, ‘ஸ்விக்கி’ ஊழியர் மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுடில்லியின், காஷ்மீரி கேட் என்ற பகுதியில் மர்காட் அனுமன் கோவில் உள்ளது. இங்கு, ராம் கச்சோரி ஷாப் என்ற சிற்றுண்டி கடை உள்ளது.
இங்கு அனுமன் கோவில் பிரசாதங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கடை அனுமன் கோவில் வளாகத்துக்குள், கோவிலுக்கு மிக அருகே உள்ளது.
இந்த கடையை நடத்தும் நபர், ஸ்விக்கி உணவு சேவை நிறுவனம் வாயிலாக, கரோல் பாக் பகுதியில் உள்ள ஹோட்டலில் இருந்து மட்டன் குருமா மற்றும் ரொட்டி, ‘ஆர்டர்’ செய்தார்.
இந்த உணவை எடுத்து வந்த ஸ்விக்கி ஊழியர், கோவிலுக்கு மிக அருகே கடை இருப்பதால், அசைவ உணவை அங்கு வந்து கொடுக்க முடியாது என்றும், வெளியே வந்து வாங்கி செல்லும்படியும் கூறியுள்ளார்.
இதனால், வாடிக்கையாளருக்கும், ஸ்விக்கி ஊழியருக்கும் வாக்குவாதம் முற்றியது.
இறுதியில் உணவை கொடுக்காமல் அவர் திரும்பினார்.
இந்த விவகாரத்தில், ஸ்விக்கி ஊழியரை அந்நிறுவனம் பணி நீக்கம் செய்ததாக கூறப்பட்டது.
ஆனால், ‘அவரை பணி நீக்கம் செய்யவில்லை’ என ஸ்விக்கி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
கோவிலுக்கு அருகே உள்ள கடையில் அசைவ உணவு தரமாட்டேன் என்று சொன்ன அந்த ஊழியரை, அனுமன் கோவில் நிர்வாகம் அழைத்து பாராட்டி கவுரவித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்