கோவை: ஊட்டி அருகே பள்ளியில் ஊட்டச்சத்து மாத்திரைகளை போட்டி போட்டு சாப்பிட்ட மாணவி பலியானார். மேலும் ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே காந்தல் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளியில் 249 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி மாணவர்களுக்கு கடந்த 6-ம் தேதி ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. அப்போது 8-ம் வகுப்பு மாணவிகள் 4பேர் மாத்திரைகளை போட்டிபோட்டு சாப்பிட்டுள்ளனர். இதில், 3 மாணவிகள் 30 மாத்திரைகளையும், ஒரு மாணவி 40 மாத்திரைகளையும் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் 4 மாணவிகளும் மயக்கம் அடைந்தனர்.
ஆசிரியர்கள் அவர்களை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில், 40 மாத்திரைகளை சாப்பிட்ட மாணவிக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டது. அவரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு நேற்று கொண்டு சென்றனர். ஆனால், சேலம் அருகே சென்றபோது அந்த மாணவி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ‘‘மேலும், ஒரு மாணவிக்கும் கல்லீரல் பாதிப்பு இருக்கிறது. இவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 2 மாணவிகளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது’’ என்றார்.
* தலைமை ஆசிரியர் பணியிட நீக்கம் சத்து மாத்திரைகளை அதிக அளவு தின்றதால் மாணவி இறந்த விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட காந்தல் நரகராட்சி உருது நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முகமது அமீன், மாத்திரை விநியோகிக்கும் கண்காணிப்பு அதிகாரியாகவும், ஆசிரியையாகவும் பணியாற்றிய கலைவாணி ஆகிய 2 பேரையும் பணியிட நீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.