வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
புற நகர்ப் பகுதியின் அந்த வீட்டின் முன்னால், அந்த வி.வி.ஐ.பி.,யின் கார் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கிய அவரை, பாதுகாப்புப் பணி அதிகாரி ஓடி வந்து வணங்கி விட்டு, ’இங்கு வருவதாக ஷெட்யூலில் இல்லையே!’ என்று திகைப்புடன் முணங்க,
’பரவாயில்லை.. அதனாலென்ன? நான் பள்ளியைத் திறந்து வைக்கப்போகிறேன். அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கப் போகிறவர் இவர். இவரையும் நாம கூடவே அழைச்சிக்கிட்டுப் போயிடுவோமே. நீங்கள்லாம் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!சீக்கிரம் போயிடலாம்’ என்று கூறிய அவர் கிடுகிடுவெனப் படியேறி உள்ளே சென்றார்!
அந்தத் தெருவே அவரை ஆச்சரியமுடன் பார்த்தது. அவரின் காரும், அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு வாகனமும் நின்றன!

உள்ளே சென்ற அந்த வி.வி.ஐ.பியை வரவேற்க ஓடி வந்த வி.ஐ.பி., மேலே ஆடைகள் ஏதும் அணியாமல் இருந்தபடியால், பழைய நாற்காலி மேல் கிடந்த பழைய துண்டால் உடம்பைப் போர்த்தியபடி அவரை வரவேற்றார்!
‘என்ன இப்படி திடீர்னு…சொல்லாம…கொள்ளாம…’
‘ஆமா…ப்ரண்டைப் பார்க்க…சொல்லி…தேதி குறிச்சி…பர்மிஷனெல்லாம் வாங்கணுமாக்கும்! பள்ளிக் கூடத்தை நான் திறக்கப்போறேன். தலைமை யாரு?தாங்கள்தானே’ அதான்…கூப்பிட்டுக்கிட்டு போயிடலாமுன்னு வந்தேன்’
‘ஆமாம்! நான் கிளம்பிக்கிட்டுதான் இருந்தேன். நீங்க இந்த வீட்டுக்கு…’
‘ஏன்? வரக்கூடாதா? நட்புக்குள்ள முன்னே, பின்னேவெல்லாம் கெடையாது கெளம்பும். ’
‘காபி..டீ…ஏதாவது…அவ இன்னும் ஸ்கூல்ல இருந்து வர்ல…வர்ற நேரந்தான்!’
‘தங்கச்சி வர்றபடி வரட்டும். நாம கெளம்புவோம்!’ என்று அவர் சொல்ல…
‘சரி.. இதோ கெளம்பிடலாம், ஒரு நிமிஷம்…’ என்று சொல்லிய வி.ஐ.பி., மொட்டை மாடிக்கு ஓடினார், அவசரமாக இறங்கி வந்த அவர்… இதோ ரெண்டு நிமிஷத்தில கெளம்பலாம், என்று சொல்லி, வயிற்று வலியால் துடிப்பவன் திகைப்பது போல, அவதியுடன் திகைத்து நின்றார்.
‘ரெண்டு நிமிஷந்தானே, சரி! அதுக்கு ஏன் இந்தப் பதைப்பு?இப்படி வந்து உட்காரும்!’
‘இல்ல…ஒங்களைத் தாமதிக்க வைக்கிறது சங்கடமா இருக்கு!’
‘எனக்கு ஒண்ணும் சங்கடமில்ல…அப்புறம்…எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு?’
‘ம்.. நல்லா இருக்கோம். ஒரு பிரச்னையும் இல்ல, இதோ வந்துடறேன்.. மீண்டும் மொட்டை மாடி ஏறினார், அன்றைக்கென்று பார்த்து வானம் மந்தாரமாக இருந்தது, காயும் சட்டை, வேட்டியைத் தொட்டுப் பார்த்தார்.. சரியாகக் காயவில்லை.

ஆனாலும் இனியும் தாமதிக்க முடியாது. அவரிடம் மேலும் நேரம் கேட்கவும் முடியாது’ ம்.. இது ஒண்ணும் நமக்குப் புதுசு இல்லயே, எத்தனையோ முறை அவசரத்துக்கு அரை ஈர ஆடைகளைத் தானே உடுத்திக் கொண்டு சென்றுள்ளோம்!’ என்று தனக்குள்ளாகச் சொல்லியபடி, ஓரமாகச் சென்று வேட்டியைக் கட்டி, சட்டையையும் அணிந்து கொண்டார்.
‘ம்! கெளம்புவோம்.. நீங்க இங்க வந்திருக்கவே வேண்டாம்.. நான் எப்படியும் வந்திருப்பேன்ல, என்றவரை சற்றே ஏறிட்டுப் பார்த்த வி.வி.ஐ.பி., தனக்குள்ளாகச் சொல்லிக் கொண்டார்!’ வந்திருப்பே…கையில காசும் இருக்காது.. ஆட்டோவில கூட வர முடியாது. பஸ்ஸுக்கு நின்னிருப்பே!’
அவர்கள் இருவரும் ஒன்றாக இறங்கிக் காரில் ஏறியதை, அக்கம் பக்கத்தவர்கள் ரசித்துப் பார்த்தார்கள்.
விழா மேடை உயிர்ப்பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது, காரிலிருந்து இறங்கிய இருவரையும் நிகழ்ச்சியாளர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள், நேராக மேடைக்கு அழைத்துச் சென்றார்கள்.
புதிய பள்ளிக் கட்டிடம், திறப்பு விழா உற்சாகத்தில் மகிழ்ந்திருந்தது. வி.ஐ.பி., தலைமை தாங்கிப் பேசினார்!கல்வியின் முக்கியத்துவம் பற்றியும், அதற்கு அரசு எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் சிலாகித்துப் பேசினார், அரசின் முன்னெடுப்புக்குத் தன்னால் ஆன அனைத்தையும் செய்வதாகச் சொன்னார்.

கட்டிடத்தைத் திறந்து வைத்த வி.வி.ஐ.பி., அதிகம் பேசவில்லை. தனது உரையைச் சுருக்கமாக முடித்துக் கொண்டார். விழா இனிதே முடிய, வி.வி.ஐ.பி.,யை நிரூபர்கள் சூழ்ந்து கொண்டார்கள். கேள்விக்கணைகளைத் தொடுக்க ஆரம்பித்தார்கள். எல்லாவற்றுக்கும் ரத்தினச் சுருக்கமாகப் பதிலளித்தார்.
அதில் ஒரு நிரூபர், வழக்கத்திற்கு மாறாக வி.வி.ஐ.பி., தனது வலது தோளில் துண்டு போட்டிருப்பதைக் கவனித்து விட்டார்,
‘தலைவர! எப்பொழுதும் இடது தோளில் துண்டு அணியும் பழக்கமுள்ள நீங்கள், இன்று வலது தோளில் போட்டிருக்கிறீர்களே. அதற்கு ஏதேனும் காரணம் உண்டா?’என்று வினவினார்.
‘அப்படியா.. நானே கூட அதைக் கவனிக்கல.. என்னவோ போட்டிருக்கேன்!’ என்று மழுப்பலாகப் பதில் சொல்ல, அந்த நிரூபர் விடுவதாக இல்லை!
‘இல்ல தலைவர, ஏதோ காரணம் இருக்கணும், நீங்க சொல்ல மாட்டேங்கறீங்க!’
என்றவரிடம்,
‘ஒரு காரணமும் இல்லப்பா’ என்று சமாளிக்கப் பார்த்தாலும் நிரூபரை ஏமாற்ற மனமின்றி, காரணத்தைச் சொல்றதைக் காட்டிலும், பார்த்திடறது நல்லதுதானே’என்று கூறியபடி, துண்டை விலக்க, உள்ளே… சட்டை லேசாகக் கிழிந்து தொங்கியது. அத்தனை நிரூபர்களும் விக்கித்துப் போய் கண் கலங்க, கேள்வி கேட்ட நிரூபரோ, திரும்பத் திரும்ப ‘சாரி சார் சாரி சார்’என்று தேம்பியழாத குறையாகப் புலம்பினார்.

‘அட என்னப்பா நீ, இதற்கு எதுக்கு சாரி?சும்மா இருப்பா ’என்று சொல்லி விட்டு, அவர் கிளம்பினார்!
இவர்களைப் போன்ற தியாகச் செம்மல்கள் வாழ்ந்த காரணத்தால்தான் இந்த மண், புண்ணிய பூமியாகிப் புனிதம் பெற்றது! இவர்கள் மீண்டும் இந்த மண்ணில் தோன்ற வேண்டும்!
கட்சிகள், கொள்கைகள் வேறு வேறாக இருப்பினும்,’All roads lead to Rome’
என்பதைப் போல, அவர்களின் எண்ணமெல்லாம் ஏழைகளின் உயர்விலும், நாட்டு முன்னேற்றத்திலும் மட்டுமே இருந்தது!
-தன்னால் மட்டுமே முடியுமென்ற அகங்காரமில்லை!
-தன் கட்சி, மாற்றுக்கட்சி என்ற எண்ணமில்லை!
-ஊர் கூடித் தேர் இழுத்தலே உசிதம் என்ற நல்லெண்ணம் உண்டு!
-மூச்சிலும்,பேச்சிலும் மக்கள் நலனொன்றே குறிக்கோள்!
இது ஒன்றும் என் கற்பனையில் தோன்றியதல்ல!
வரலாறு தன் பக்கங்களில் பதிந்து வைத்திருக்கும் பொக்கிஷம்!
மாற்றிக் கொள்ள போதுமான ஆடைகளைப் பற்றிக்கூட கவலைப்படாத அவர்களை எங்கு கொண்டு வைப்பது?
அந்த இருவர் யாரென்று நான் இப்பொழுது சொல்லப் போவதில்லை. எம்மைப் போன்ற 60ஸ் கிட்ஸ் நன்றாகவே அறிவார்கள். அவர்களில் பலர், comment பகுதியில் யாரென்று எழுதுவார்கள்.
இளைஞர்கள் இவர்களைப்போன்ற தலைவர்களை உணர வேண்டும். அவர்களைப் போல வாழ முன்வர வேண்டும்!
வருவார்கள். ஏனெனில் அவர்கள் அப்படி வாழ்ந்து காட்டிச் சென்றிருக்கிறார்கள்!
-ரெ.ஆத்மநாதன்,
காட்டிகன்,சுவிட்சர்லாந்து
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.