புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று கவர்னர் தமிழிசை உரையாற்றினார். அவரது உரையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், கருச்சிதைவு நோய்க்கான புரூசெல்லா தடுப்பூசிகள் 9,000 வாங்கப்பட்டுள்ளது. ராஜிவ் கால்நடை மருத்துவக் கல்லுாரியில் உயிரி தொழில் நுட்பவியல் ஆராய்ச்சிக்காக ரூ.2 கோடியில் பொது அறிவியல் ஆய்வக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நலிவுற்ற கூட்டுறவு நிறுவனங்களை மீட்டெடுத்து புத்துயிர் அளிக்க ரூ.30 கோடி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.3.84 கோடியில் ஜீனோம் சிக்வென்சிங் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் தலிபரா என்ற இடத்தில் இருந்து 100 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய புதுச்சேரி அரசுக்கும், நெய்வேலி அனல் மின் நிலையத்திற்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
காமராஜர் கல்வி உதவி திட்டத்தின் கீழ், 415 மருத்துவக் கல்வி மாணவர்கள், 4,176 பொறியியல் கல்வி மாணவர்கள், 881 செவிலியர் கல்வி மாணவர்கள் உள்பட மொத்தம் 5,472 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.20.48 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு, 55 குறு நிறுவனங்களை மேம்படுத்த 35 சதவீத மானியத்துடன் வங்கி கடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 22 தொழில்முனைவோர்கள் தொழில் துவங்குவதற்காக ரூ.60.55 லட்சம் மானியத்துடன் ரூ.1.88 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு 2022-23ம் ஆண்டில், தொழிற்சாலைகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 45 நிறுவனங்களுக்கான மூலதன முதலீடு, வட்டி, ஜெனரேட்டருக்கான மானியம், அறிவுசார் சொத்து ஆதரவு உதவிக்காக ரூ.10.17 கோடி வழங்கப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதியில் 3 நிறுவனங்களுக்கு மூலதன முதலீட்டு மானியமாக ரூ.60.48 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
ஜல்ஜீவன் குடிநீர் இணைப்பு திட்டத்தின் கீழ், கிராமப்புற குடும்பங்களுக்கு 60 சதவீதத்திற்கு மேல் சுத்தமான குடிநீர் முறையாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த சிறந்த பணியை அங்கீகரிக்கும் வகையில் புதுச்சேரிக்கு முதல் பரிசை ஜனாதிபதி வழங்கியுள்ளார். கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கியதால், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தை ‘ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர்’ என்ற சான்றிதழ் பெற்ற மாவட்டமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அம்ருத் 2.0 என்ற திட்டத்தின் கீழ், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்பு பகுதிகளில் குடிநீர் வழங்கல், நீர்நிலைகளை மீட்டெடுத்தல், பாதாள சாக்கடை வசதிகள், கழிவு நீர் மேலாண்மை திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.150 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
புதுச்சேரி துறைமுகத்தில் சரக்குகளை கையாளுவதற்கு சுங்க துறையின் ஒப்புதல்கள் பெறப்பட்டு, வணிக ரீதியிலான சரக்குகளை கையாள புதுச்சேரி துறைமுகம் தயார் நிலையில் உள்ளது.
துறைமுக உள்வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்காக தடுப்பு சுவர், பாலம் அமைக்கும் பணிக்காக மத்திய அரசு ரூ.4.68 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு பின் சுற்றுலா பயணிகளின் வருகை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. போக்குவரத்து துறை வளாகத்தில் வாகன இயக்க கண்காணிப்பு மையத்திற்கான கட்டுப்பாட்டு அறை, மத்திய உதவியுடன் ரூ.4.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மடிகணினி வழங்க 40 கோடி வழங்கப்பட்டுள்ளது.
வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் மாதாந்திர நிதியுதவி திட்டம், கடந்த ஜனவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 13 ஆயிரத்து 339 பயனாளிகளுக்கு ரூ.1.33 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் பெற்றோர் இருவரையும் இழந்த 12 குழந்தைகளுக்கு தலா 5 லட்சம் மருத்துவக் காப்பீடு செய்து, சுகாதார அட்டை வழங்கப்பட்டுள்ளது உள்ளிட்ட அறிவிப்புகள் கவர்னர் உரையில் இடம் பெற்றுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்