2023ஆம் ஆண்டு சிறுபோகத்தில் நெற்செய்கை மற்றும் மேலதிக பயிர்ச் செய்கைகளுக்கு நீர் விடுவிப்பதற்கு தயாராக இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் விவசாய அமைச்சுக்கு அறிவித்துள்ளது.
இதன்படி, மகாவலி மற்றும் சிறிய நீர்பாசன கால்வாய்களின் ஊடாக, எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரை நீர் திறந்துவிடப்படவுள்ளது.
இந்த மாதம் அதிக மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் மழை எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இடையூறு இன்றி நீரை வழங்க முடியும் என நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தற்போது நீர்ப்பசனம் பெறும் நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 77 சதவீதமாக உள்ளது. அதில் 66 வீதமான நீரை பயிர்ச்செய்கைக்காக விடுவிக்கப்படவுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக , நெற் செய்கைக்கு 75 வீதமும், மேலதிக பயிர்ச் செய்கைக்கு 25 வீதமும் நீரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்கள் தலைமையில் மாவட்ட விவசாய பிரதிநிதிகளின் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
அதன்போது, விவசாயிகள் செய்கைக்காக தயாராக உள்ளதாக விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.