இறப்பில் சந்தேகம் என புகார் 4 மாதங்களுக்கு பிறகு பால் வியாபாரியின் சடலம் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை-அணைக்கட்டில் பரபரப்பு

அணைக்கட்டு : வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா கெங்கநல்லூர் ஊராட்சி மலைசந்து கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி மகன் நடராஜன்(35), பால் வியாபாரி. இவர் திருமணம் நடந்த 2 நாட்களிலேயே மனைவியை விட்டு பிரிந்து 8 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணிற்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்தாண்டு ஊசூர் புளியந்தோப்பு பகுதியில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்த நடராஜன் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

பின்னர், நவம்பர் 2ம் தேதி வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். 5ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் குடும்பத்தினர் அவரை வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்று மாலை உயிரிழந்தார். இதையடுத்து, அவரது சடலம் சின்னகெங்கநல்லூர் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் 27ம் தேதி நடராஜனின் இறப்பில் சந்தேகம் இருக்கிறது. ஆகையால், சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று அரியூர் போலீசில் நடராஜனின் அண்ணன் சேட்டு புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து அணைக்கட்டு தாசில்தார் ராமேஷூக்கு தெரிவித்தனர்.

நேற்று தாசில்தார் ரமேஷ், பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அரியூர் எஸ்ஐ சின்னப்பன், கெங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், அணைக்கட்டு எஸ்ஐ சீனிவாசன், விஏஓ பிரசாத் ஆகியோர் முன்னிலையில் நடராஜனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

இதனை வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் பேராசிரியர் கலைச்செல்வி கொண்ட 2 மருத்துவ குழுவினர் சடலத்தை அங்கேயே பிரேத பரிசோதனை செய்து தடயங்களை சேகரித்தனர். பின்னர், அந்த குழியிலேயே சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

தடயங்கள் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்படும். பரிசோதனை முடிவுகள் ஓரிரு நாட்களுக்குள் தெரிவிக்கப்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பால் வியாபாரியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டு 4 மாதங்களுக்கு பிறகு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.