டாடா படத்தை தியேட்டரில் தவறவிட்டீங்களா… ஓடிடியில் வந்துவிட்டது – மிஸ் பண்ணாதீங்க

Dada Movie OTT Release: அறிமுக இயக்குநர் கணேஷ் கே. பாபுவின் உருவாக்கத்தில் நடிகர் கவினின் நடிப்பில் கடந்த பிப். 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம், ‘டாடா’. முழுமையாக ‘டாடா தி அப்பா’ என்ற பெயரில் வெளியான இப்படத்தை அம்பேத் குமார் தயாரித்திருந்தார். இந்த படத்தில் நடிகர்கள் பாக்யராஜ், அபர்ணா தாஸ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

‘ஃபீல் குட் படம்’

மினி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் டாடா திரைப்படம் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது. எளிமையான மற்றும் வலிமையான திரைக்கதை மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டு, தமிழில் நீண்ட நாள்கள் கழித்து வெளிவந்த ‘ஃபீல் குட் படம்’ என்றும் பெயர் பெற்றது. தொடக்கத்தில், இப்படத்திற்கு பிரமோஷன் பெரியளவில் இல்லாமல் இருந்தாலும், படம் வெளியானதும் வாய்வழியாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் பெரிதும் பேசப்பட்டது.

கல்லூரி மாணவின் வாழ்வில் ஏற்படும் திடீர் மாற்றங்களும், கட்டமைக்கப்பட்ட குடும்ப உறவுகளில் இருந்து ஒதுக்கப்பட்டு நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின் அதே கட்டமைக்கப்பட்ட உறவுமுறைக்குள் திரும்புவதே இப்படத்தில் சற்று பெரிதான ஒன்லைனராகும். முன்கூறியது போன்ற, எளிமையாகவும், வலிமையாகவும் காட்சிகளை நகர்த்தி, ரசிகர்களை திரைக்கதையுடன் கட்டிப்போட்டதால், ‘டாடா’ திரையரங்கங்கள்தோறும் கைத்தட்டலை அள்ளியது. 

ஓடிடி ரிலீஸ்

படத்திற்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் பலத்த வரவேற்பு அளித்தனர். இந்த படத்தின் இயக்குநர் கணேஷ் கே. பாபு, ‘டாடா’ படம் வெளியான அன்றே, லைகா நிறுவனத்தால் அடுத்த படத்திற்கு ஒப்பந்தமானார். ‘டாடா’ படத்திற்கும், அதன் படைப்பாக்கதிற்கும் கிடைத்த வெற்றியாக அது அமைந்தது. கவினின் நடிப்பும் பெருமளவில் ரசிகர்களை கவர்ந்து, ஃபேமிலி ஆடியன்ஸையும் திரையரங்குகளுக்கு படையெடுக்க வைத்தது. 

அந்த வகையில், அனைத்து வயதினரும் திரையரங்குகளிலேயே கொண்டாடிய ‘டாடா’ திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. படம் வெளியாகி சரியாக ஒருமாதம் கழித்து, அதாவது மார்ச் 10ஆம் தேதியான இன்று நள்ளிரவு படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.