கோவை/திருப்பூர்: வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதுபோன்று போலி வீடியோக்களை வெளியிட்டதில் அரசியல் கட்சியினருக்கு தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தப்பட்டு வருவதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தொழில்முனைவோருடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதில் மேற்கு மண்டல ஐஜி ஆர்.சுதாகர், மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், டிஐஜிக்கள் விஜயகுமார், ராஜேஸ்வரி, காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், துணை ஆணையர் சந்தீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 1-ம் தேதி முதல் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவியதால் குழப்பங்கள் ஏற்பட்டன. இவற்றை சரியான முறையில் கையாண்டு, சாதாரண சூழல் திரும்புவதற்காக உதவிய தொழில் நிறுவன உரிமையாளர்களுக்கு பாராட்டுகள்.
தொடர்ந்து பொய்யான செய்திகள், வதந்திகளை ஒரு சிலர் பரப்புகின்றனர். இதுதொடர்பாக மொத்தம் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் சிலரை பிடிக்க தனிப்படை போலீஸார் டெல்லி, பெங்களூரு, பாட்னா, போபாலில் முகாமிட்டுள்ளனர்.
தமிழகத்துக்கே சம்பந்தமில்லாத வீடியோக்களை பதிவு செய்து பரப்புவதற்கான காரணம் என்ன என்று தொடர்புடையவர்களை கைது செய்து விசாரித்த பின்னரே தெரியவரும். பணத்துக்காக சில நபர்களும் தொழிலாளர்கள் தாக்கப்படுவதுபோல நடித்து வீடியோக்களை பரப்புகின்றனர்.
தாம்பரத்திலும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோக்களை வெளியிட்ட நபரை கைது செய்துள்ளோம். இதில் அரசியல் கட்சியினருக்கு தொடர்பு உள்ளதா என புலன் விசாரணையின் இறுதியில் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, கோவை மற்றும் திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கு டிஜிபி சென்று அவர்களுடன் கலந்துரையாடினார்.
46 ஆயிரம் பேருடன் சந்திப்பு: திருப்பூரைச் சேர்ந்த தொழில் துறையினருடன் நேற்று மாலை ஆலோசனை நடத்திய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழ்நாடு குறித்து உண்மைக்கு புறம்பான நிகழ்வுகளால் ஏற்பட்ட பீதி, அச்சம், பதற்றம் தற்போது தணிந்துள்ளது. கடந்த 8 நாட்களாக தமிழகத்தின் அனைத்து மாநகர் மற்றும் மாவட்ட போலீஸார் ராணுவம் போன்று அணியாக நின்று, இரவு பகலாக பணியாற்றி வதந்தியை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
திருப்பூரை பொறுத்தவரை 46 ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்களை போலீஸார் நேரடியாக சந்தித்துள்ளனர். அதேபோல, 462 நிறுவனங்களில் நேரில் ஆய்வு செய்துள்ளனர்” என்றார். திருப்பூர் காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு, காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய் உடனிருந்தனர்.கோவையில் நேற்று தொழில்முனைவோருடன் கலந்துரையாடிய டிஜிபி சைலேந்திரபாபு. அருகில் காவல்துறை அதிகாரிகள்.