மீண்டும் அதிகரிக்கும் ஒமைக்ரான்… அமைச்சர் சொல்வது என்ன?

Omicron Increase In Tamil Nadu: தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் நடைபெறும் காய்ச்சல் தடுப்பு  சிறப்பு மருத்துவ முகாமினை முன்னிட்டு, சென்னை சைதாப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கிவைத்தார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,”சமீப காலமாக இந்தியா முழுவதும் H3N2 வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலை தடுக்க கடந்த வாரம் ஐசிஎம்ஆர் அறிவிப்பு வெளியிட்டது. அதனடிப்படையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் தொடங்கிவைக்கப்படுகிறது. சென்னையில் 200 வார்டுகளில் 200 சிறப்பு காய்ச்சல் முகாம்களும், தமிழகம் முழுவதும் 800 இடங்களிலும் நடக்கிறது.

காய்ச்சல் பாதித்தவர்களுக்கு 11, 333 மருத்துவ கட்டமைப்புகளில் ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் வரை தேவையான மருந்துகள் கையிருப்பு வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. பெரிய அளவில் பதற்றம் அடைய தேவை இல்லை. 

காய்ச்சல் உடல்வலி, சளி, இருமல், தொண்டை வலி பதிப்பு ஏற்பட்டவர் சிகிச்சை பெறவும். காய்ச்சல் பாதித்தவர்கள் வீடுகளில் தனிமைபடுத்திக் கொள்ளவும், கொரோனா பேரிடர் காலத்தில் கடைபிடித்த விதிமுறைகளை போல முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும். பேரிடர் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஒமைக்ரான் வகையான தாக்கம் கூடிக் கொண்டிருக்கிறது. தினசரி 20 முதல் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் தினசரி ஏற்படுகிறது. மக்கள் தொடர் விழிப்புணர்வுடன் இருந்து ஐசிஎம்ஆர் அறிவுறுத்தலின்படி முகக்கவசம் அணிந்து பாதிப்புகளில் இருந்து தவிர்க்கலாம்” என தெரிவித்தார்.  

ஊட்டி அருகே சத்து மாத்திரை சாப்பிட்ட குழந்தை பாதித்ததாக வந்த தகவலுக்கு பதிலளித்த அமைச்சர், “வியாழக்கிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமை சத்து மாத்திரை தந்துள்ளார்கள். அங்கு ஆசிரியர்கள் மொத்தமாக மாத்திரைகளை வழங்கியுள்ளனர். உயிரிழந்த குழந்தை 70 மாத்திரை சப்பிட்டுள்ளார். இது தொடர்பாக  சுகாதாரத்துறை அலுவலர்கள் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்றார்.

முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. சென்னையில் 200 இடங்களில் நடைபெறுகிறது. சென்னை சைதாப்பேட்டையில் சிறப்பு காய்ச்சல் முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.