கோவை: இந்திய தேசத்தின் பிரதமர் பொறுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்க உள்ளார் என கோவையில் நடந்த விழாவில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசினார்.
கோவை மாவட்ட திமுக சார்பில், மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா இன்று கோவை சின்னியம்பாளையத்தில் நடந்தது. இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். முன்னதாக, இவ்விழாவில் மி்ன்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசியதாவது: “எல்லோர்க்கும் எல்லாம் என்ற நோக்கத்தோடு பல்வேறு சிறப்புத் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார்.
நம் இலக்கு வரக்கூடிய மக்களவைத் தேர்தல் என்பதை கவனத்தில் கொண்டு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் சூளுரைத்ததைப் போல், வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40 வேட்பாளர்களும் மகத்தான வெற்றியை பெற்றார்கள் என்பதை உருவாக்கக்கூடிய வகையிலும், கோவையின் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறும் வகையிலும் அனைவரும் இணைந்து பணியாற்றிட வேண்டும். தமிழகத்தின் ஒப்பற்ற முதல்வர், இன்று ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் வழிகாட்டியாக திகழ்கிறார். நாளை இந்திய தேசத்தை ஆளக்கூடிய பிரதமராக ஆட்சிப் பொறுப்பை ஏற்க இருக்கின்றார் முதல்வர்” இவ்வாறு அவர் பேசினார்.