திருமலை: தெலங்கானா மாநிலத்தில் இருவரை காதலித்து குழந்தைகளை பெற்ற இளைஞர், ஒரே மணமேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம் சர்லா கிராமத்தை சேர்ந்தவர் முத்தாத்தையா- ராமலட்சுமி தம்பதியின் மகன் சத்திபாபு(36). இவருக்கு தோஸ்லாபள்ளி கிராமத்தை சேர்ந்த ஸ்வப்னாகுமாரியுடன் காதல் ஏற்பட்டுள்ளது. ஸ்வப்னாவிடம், சத்திபாபு தனது காதலை கூற அவரும் ஏற்றுக் கொண்டார். இருவரும் நெருங்கி பழகியதில், ஸ்வப்னா கர்ப்பமானார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. திருமணம் முடிக்காமல் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், பிரியும் நிலை ஏற்பட்டது. குழந்தையுடன் ஸ்வப்னா தாய் வீட்டில் வசித்து வந்த நிலையில், சத்திபாபு சொந்த ஊருக்கு சென்று விட்டார். இதற்கிடையே, குர்ணாபள்ளி கிராமத்தை சேர்ந்த சுனிதாவுடன், சத்திபாபுவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வசித்து வந்த நிலையில், கர்ப்பமான சுனிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த விவகாரத்தை அறிந்த ஸ்வப்னா கிராம பஞ்சாயத்திடம் முறையிட்டார்.
இந்நிலையில் மூன்று குடும்பத்தினரும் கலந்து ஆலோசித்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இருவரையும் திருமணம் செய்து கொள்வதாகவும், குழந்தைகளை பராமரித்துக் கொள்வதாகவும் சத்திபாபு உறுதி அளித்ததால், ஸ்வப்னாவும், சுனிதாவும் சமரசம் அடைந்தனர். இதனையடுத்து நேற்று திருமணம் நடைபெற்றது. ஒரே மேடையில் இரண்டு பெண்களையும் சத்திபாபு திருமணம் செய்து கொண்டார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். முன்னதாக திருமண அழைப்பிதழில் இரண்டு மணமகள்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.