வேலூர்: காட்பாடி அக்சீலியம் பெண்கள் கல்லூரி ஆண்டு விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றனர். இதில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், ‘எல்லோரும் படிக்கவேண்டும் என்ற திட்டம் முதல்வர் கொண்டுவந்துள்ளார். அதுதான் புதுமை பெண் திட்டம். இந்த கல்லூரியில் 462 மாணவிகள் ரூ.1,000 உதவித்தொகை பெறுகின்றனர். இதனால் உயர்கல்வியில் 27சதவீதம் அதிகரித்துள்ளது. படிக்கும்போதே வேலைவாய்ப்பு பெறுவதற்கு நான் முதல்வன் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்’ என்றார்.
தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: இருமொழிக்கொள்கையை கொண்டு வந்தவர் அண்ணா. அதைத்தான் திமுக ஆட்சி மேற்ெகாண்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் தான் நாட்டின் மொழிக்கொள்கை. ஆனால் 3வது மொழியாக சமஸ்கிருதத்தை படிக்க சொல்கிறார்கள். படி என சொல்வது யாராவது சொல்லலாம். ஆனால் கவர்னர் சொல்லக்கூடாது.
அது கவர்னர் வேலை இல்லை. கவர்னர் வேலை நாங்கள் அனுப்பும் கோப்புகளில் கையெழுத்து போடும் வேலை. ஆனால் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று சொல்வது அரசியல் சட்டத்தின் வரம்ைப மீறுவதாகும். அதனால் தான் அம்பேத்கர் அப்போதே சொன்னார் கவர்னர் பதவி வேண்டாம் என்று. அதையும் மீறி மாநிலத்திற்கு ஒரு கவர்னர் என்ற நிலை மாறி, ஊருக்கு ஒரு கவர்னர் வந்துவிடுவார்கள் போல இருக்கிறது. இவ்வாறு துரைமுருகன் பேசினார்.