சென்னை: முகப்பு விலையைவிட கூடுதல் தொகைக்கு முத்திரைத்தாள் விற்பனை செய்வது குறித்து புகார்கள் எழுந்துள்ளதால், அதுபற்றி கண்காணிக்கும்படி மாவட்ட பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை தலைவர் சிவனருள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆவண எழுத்தர்களால் வழங்கப்படும் கட்டண ரசீதுடன் பத்திரங்கள் பதிவுக்கு தாக்கல் செய்யப்படுவதை பதிவு அலுவலர்கள் உறுதி செய்து பதிவு மேற்கொள்ள ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கட்டண ரசீதை குறிப்பு ஆவணமாக அந்தந்த பத்திரங்களுடன் ‘ஸ்கேன்’ செய்வதை உறுதி செய்துகொள்ள வேண்டும். சார்பதிவாளர் அலுவலக ஆய்வின்போது இதை தவறாமல் உறுதி செய்ய மாவட்ட பதிவாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேலும், முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் முத்திரைத்தாள் முகப்பு விலையைவிட கூடுதல் தொகைக்கு விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார் பெறப்படுகிறது. இதுகுறித்து முத்திரைத்தாள் விற்பனையாளர் பணி செய்யும் இடங்களில் ஆய்வு மேற்கொள்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.