சீனாவிற்கு சல்யூட் அடிக்கும் ராகுல் காந்தியின் ரசிகர்கள்; நடந்தது என்ன.?

ஈரான் மற்றும் சவுதி அரேபியாவை இணைத்த சீனாவை, ராகுல் காந்தியின் ஆதரவாளர்கள் பாராட்டி வருகின்றனர்.

பரம எதிரிகளான ஈரானையும் சவுதி அரேபியாவையும் சீனா இணைத்துள்ளது. இதற்கு இந்திய காங்கிரஸ் கட்சியின் துடிப்பு மிக்க தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவாளர்கள் பாராட்டியுள்ளனர். ‘‘இரண்டு பெரிய மற்றும் சக்திவாய்ந்த முஸ்லீம் நாடுகள், ஆனால் பரஸ்பர உறவுகள் ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் கூட நடைபெறவில்லை.

சீனா மத்தியஸ்தம் செய்து, பெய்ஜிங்கில் சந்தித்து, ரியாத்-தெஹ்ரானில் தூதரகங்களைத் திறக்க ஒப்புக்கொண்டது. ஆனால் இங்கு நம் சார்க் அமைப்பை அழித்த விஸ்குருவாக மோடி சுற்றித் திரிகிறார். இது தான் உங்கள் வெளியுறவுக் கொள்கையின் லட்சணம்’’ என தெரிவித்துள்ளனர்.

நடந்தது என்ன.?

சீன அதிபராக 3வது முறையாக ஜி ஜின்பிங் தேர்வானது முதலே, வெளிநாட்டு விவகாரங்களில் முக்கியமாக அனைத்து நாட்டு உள்நாட்டு பிரச்சனைகளில் தலையிடும் அமெரிக்காவிற்கு தகுந்த பாடத்தை கற்பிக்க சீனா முடிவு செய்துள்ளது. அதன் ஒருபகுதியாக அமெரிக்காவின் நட்பு நாடான சவுதி அரேபியாவையும், எதிரி நாடான ஈரானையும் சீனா ஒன்றிணைத்துள்ளது. இது சர்வதேச ராஜாங்க விவகாரங்களிலும், பூகோள அரசியலிலும் அமெரிக்காவிற்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

கடந்த 5 நாட்களாக சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற நடுநிலை பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஓமன் நாடும் இந்த சமரச பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. இது மத்திய கிழக்கு அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக அமெரிக்கா இந்த விடயத்தை விரும்பாது என்றும் கூறப்படுகிறது. பெரும்பாலும் ஏமன் போரிலும் இந்த விடயம் மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இது குறித்து சவுதி அரேபியா வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பதிவில், ‘‘ஈரான் சவுதி அரேபியா இடையே கடந்த 2001ம் ஆண்டு போடப்பட்ட உடன்படிக்கையின் படி, இரண்டு நாடுகளும் தங்களது பாதுகாப்பு கூட்டாண்மையை மீண்டும் தொடர்வோம்’’ என தெரிவித்துள்ளது.

ஈரான் – சவுதி மோதல் வரலாறு

அதேபோல் ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி ஷம்கானி கூறும்போது, ‘‘இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் தவறான புரிதல்கள் அகற்றி, எதிர்காலம் சார்ந்த பார்வைகளை மேற்கொள்ள உள்ளோம். இது நிச்சயமாக பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், தற்போதைய சவால்களை நிர்வகிப்பதற்கு பாரசீக வளைகுடா நாடுகள் மற்றும் இஸ்லாம் உலகிற்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிக்கும்’’ என தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் மதத்தில் உள்ள சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லீம்களிடையே இனவெறி பிரச்சனைகள் இருந்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளான ஈரான் என்பது ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் நாடு ஆகும். சவுதி அரேபியா என்பது சன்னி பிரிவு முஸ்லீம் அதிகம் இருக்கும் நாடு ஆகும். இதன் காரணமாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று ரீதியாக மோதல்கள் நிலவி வருகின்றன.

கடந்த 7 வருடங்களுக்கு முன் சவுதி அரேபியாவில் ஷியா தலைவர் நிமிர் அல் நிமிர் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஈரானில் இருந்த சவுதி அரேபியா இராஜாங்க ஊழியர்கள் தாக்கப்பட்டனர். அதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான அதிகாரபூர்வமான உறவு முறிந்துவிட்டது.

கர்நாடக தேர்தல் 2023: காங்கிரஸ், பாஜக கனவு டமால்… அமைகிறது தொங்கு சட்டமன்றம்?

இதையடுத்து இரு நாடுகளும் எதிர் எதிர் துருவங்களாக செயல்பட்டு வருகிறது. ஏமனில் நடக்கும் போரில் ஹவுதி போராளிகளை ஈரான் ஆதரித்து உதவி வழங்கிவருகிறது. ஆனால் ஏமன் அரசப்படைகளை சவுதி அரேபியா ஆதரிக்கிறது. இந்தநிலையில் தான் ஈரெதிர் துருவங்களாக இருந்த சவுதி அரேபியா மற்றும் ஈரானை சீனா மீண்டும் ஒன்றிணைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.