புதுடெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வர் சிசோடியா 292 கோடி ஊழல் நிதி திரட்டினார் என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது.அவருக்கு மார்ச் 17 வரை அமலாக்கத்துறை காவல் வழங்கப்பட்டுள்ளது. டெல்லி புதிய கலால் கொள்கையில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி துணை முதல்வராக இருந்த சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. அதை தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவரிடம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்தி அமலாக்கத்துறையும் கைது செய்தது. இந்த வழக்கில் சிசோடியாவிடம் 10 நாள் காவலில் விசாரணை நடத்த அனுமதி கேட்டு அமலாக்கத்துறை சிறப்பு நீதிபதி எம்.கே நாக்பால் முன்னிலையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி நாக்பால் மார்ச் 17 வரை அமலாக்கத்துறை காவலில் சிசோடியாவை விசாரிக்க அனுமதி அளித்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில்,’ புதிய கலால் கொள்கை மூலம் அரசுக்கு வர வேண்டிய லாப பணத்தை தனியார் நிறுவனங்களுக்கு சிசோடியா கைமாற்றினார். இதன் மூலம் 292.80 கோடி ஊழல் நிதியை அவர் உருவாக்கினார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஊழல் தொகையின் மதிப்பு இன்னும் உயரக்கூடும். சிசோடியா மற்ற நபர்களுடன் சதி செய்து, தவறான கொள்கையை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதன் மூலம் ஊழல் வருவாயை உருவாக்குதல், பரிமாற்றம் செய்தல், மறைத்தல் போன்றவற்றில் சிசோடியா பங்கு வகித்துள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.